விருசுழி ஆற்றில் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வாகனங்களை சிறைபிடித்த மக்கள்!

திருவாடானை அருகே அரசு மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஜே.சி.பி வாகனங்களை சிறைபிடித்தனர்.

வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே ஓரளவு விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு போதுமான மழை இல்லாததால் இப்பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்குப் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க கோரி அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் திருவாடானை அருகே உள்ள விருசுழி ஆற்றில் மணல் குவாரி அமைக்க அரசு திட்டமிட்டது. இந்த ஆற்றிலிருந்து மணல் எடுப்பதற்கு ஏதுவாக ஆற்றுக்குள் சாலை அமைக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், தங்களின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் விருசுழி ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் குடிநீருக்குக் கூட கடும் பஞ்சம் ஏற்படும் எனக் கூறி மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வாகனங்கள் சிறை பிடிப்பு

மேலும் விருசுழி ஆற்றினை குடிநீருக்காகவும், விவசாய நீர் ஆதாரமாகவும் பயன்படுத்தி வரும் நீர்குன்றம், தட்டவிளாகம், பூகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து மணல் குவாரிக்காக சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஜே.சி.பி வாகனங்களை சிறைபிடித்தனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த பொதுப்பணித் துறை மணல் விற்பனை பிரிவு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதிகாரிகளின் சமாதானத்தை கிராம மக்கள் ஏற்கவில்லை. இதனால் விருசுழி ஆற்றுப் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!