சாமான்ய மக்களின் சபாஷ் கலெக்டர்!- எல்லோரும் எளிதில் தொடர்புகொள்ள வசதி!

கலெக்டர் சந்தீப் நந்தூரி

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரியை எளிதில் சாமான்ய மக்கள் தொடர்பு கொள்ளும் வகையில், ஆட்சியரின் செல்போன், ஃபேஸ்புக், ட்விட்டர் முகவரிகள்கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தின் ஆட்சியராக சந்தீப் நந்தூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து நீண்ட காலமாகத் தூர்வாரப் படாமல் கிடந்த பாளையங்கால்வாயைத் தூர்வார நடவடிக்கை எடுத்தார். அத்துடன், அணைகளுக்குச் சென்று ஆய்வு செய்த அவர், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார். 

நெல்லையின் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி மாசடைந்து சீர்கெட்டு இருப்பதை அறிந்த அவர், அதைச் சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக, பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட 2000 பேரை களத்தில் இறக்கி தாமிரபரணி ஆற்றை சுமார் 5 கி.மீ தூரத்துக்குச் சுத்தம் செய்யும் பணி நடத்தப்பட்டது

அன்புச் சுவர்

கலெக்டர் சந்தீப் நந்தூரி கடைசி வரையிலும் களத்தில் நின்று பணிகளை மேற்கொண்டார். இதனால் ஆற்றைச் சுத்தம் செய்யும் பணி முழுமையாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக சுத்தப்படுத்தும் பணிக்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், அன்புச் சுவர் என்னும் திட்டத்தை தமிழகத்திலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தத் திட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

போஸ்டர்

இந்நிலையில், ஆட்சியரை சாமான்ய மக்கள் சுலபமாகத் தொடர்புகொள்ளும் வகையில் அவரது செல்போன் நம்பர், வாட்ஸ் அப் நம்பர், இ மெயில், ஃபேஸ்புக் முகவரி, ட்விட்டர் முகவரி ஆகியவை அச்சிடப்பட்ட போஸ்டர்கள் கிராமப் பகுதிகளில் ஒட்டப்படுகின்றன. இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ‘கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கலெக்டரை சந்திக்க வேண்டுமானால் வேலைகளை விட்டு விட்டு நெல்லைக்கு வரவேண்டும். அதைத் தவிர்க்கும் வகையில் அவரது செல்போன் நம்பர் அனைவருக்கும் கிடைக்க வழிசெய்யப்பட்டு உள்ளது. 

பொது மக்கள் எந்த நேரத்திலும் அவரைத் தொடர்பு கொண்டு தங்களின் பிரச்னைகளைத் தெரியப்படுத்தலாம். அதன் மூலம் மக்களின் சிக்கலுக்கு விரைவாகத் தீர்வு கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். அதைக் கவனத்தில் கொண்டே, இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன’’ எனத் தெரிவித்தனர். இதற்கு மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!