’என் போராட்டம் தொடரும்’: இரோம் சர்மிளா பரபரப்பு பேட்டி! | 'I will not stop protesting', says Irom Sharmila

வெளியிடப்பட்ட நேரம்: 23:25 (09/08/2017)

கடைசி தொடர்பு:23:25 (09/08/2017)

’என் போராட்டம் தொடரும்’: இரோம் சர்மிளா பரபரப்பு பேட்டி!

 

இரோம் சர்மிளா

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ராமுசுப்பு அரங்கத்தில், கக்கூஸ் ஆவணம்பட இயக்குநர் திவ்யபாரதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் "  இரோம் சர்மிளா கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார்.

இதில் மனிதனே மனிதனின் மலத்தை அள்ளும் முறைக்கு எதிராகவும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளுக்கு எதிராகவும் எனப் பல பிரச்னைகள் குறித்து கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அதற்கு முன்பாக இரோம் சர்மிளா பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, ’வரும் 16-ம் தேதி கொடைக்கானலில் உள்ள சார்புப் பதிவாளர் அலுவலகத்தில் எனது திருமணம் நடைபெற உள்ளது. அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. எதற்கு என்று எனக்கே தெரியவில்லை. எனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பிறருக்கு என்ன கோபம் , தேவை உள்ளது? இதற்கெல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்லை. மரணம் என்பது ஒரு முறைதான் வரும். அது எப்போது வந்தால் என்ன அதற்காக எல்லாம் அநீதிக்குத் தலைவணங்க முடியாது. மணிப்பூரில் பல போராட்டங்கள் நடத்தினேன். போராட்டங்கள் அவ்வளவுதான் முடிந்துவிட்டது என்று நினைத்தேன். ஆனால் மணிப்பூரை விட்டு வெளியே வந்த பிறகுதான் தெரிகிறது. நாட்டில் இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் அதற்கெல்லாம் போராடவேண்டும் என்று. மனிதனின் மலத்தை மனிதன் அள்ளுவது என்பது அடிமைத் தனம். ’கக்கூஸ்’ என்ற ஆவணப்படத்தின் மூலம் பல விசயங்களை இயக்குநர் திவ்ய பாரதி வெளிக்கொண்டுவந்துள்ளார் . எனவே பீமாராவ் ராம்ஜி அவர்களது சட்டங்களைப் பின்பற்றி இது போன்ற விசயங்களுக்குப் புதிய சட்டங்கள் இயற்றி மத்திய மாநில அரசுகள் மனிதனின் அவல நிலையை மாற்றவேண்டும். ஆனால், அதற்கு மாறாக அந்தப் படத்தின் மூலம் அநீதிகளைச் சுட்டிக்காட்டிய திவ்ய பாரதிக்கு எதிராக செயல்படுவது தவறானது. நான் என்றும் திவ்யபாரதிக்குக் குரல் கொடுப்பேன். அவரோடு துணையாக நிற்பதில் பெருமைகொள்கிறேன். கக்கூஸ் தொடர்பான கவிதை ஒன்று எழுதிவருகிறேன் அந்தக் கவிதை அரசியல் பேசும் விதமாக அமையும்’ என்று தெரிவித்தார் .