வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:53 (09/07/2018)

வெளிநாட்டுக்கு கடத்த இருந்த 300 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்!

 ராமேஸ்வரம் அருகே, மண்டபத்தில் வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த சுமார் 300 கிலோ கடல் அட்டைகளை, கடலோர காவல் பிரிவு போலீஸார் பறிமுதல்செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்
 

 கடல்வாழ் உயிரினங்களில், அரிய வகை உயிரினங்களான ஆமை, சுறா, கடல் குதிரை, கடல் அட்டை, சில வகை சங்குகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள், மீனவர்களால் பிடிக்கப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் அதிகமாகத் தேவைப்படும் கடல் அட்டைகள், இங்கிருந்து கள்ளத்தனமாகக் கொண்டுசெல்லப்படுகிறது. கள்ளத்தனமாக இவை கொண்டுசெல்லப்படுவதால், இதற்கு அதிக விலையும் கிடைக்கிறது. 

இந்நிலையில், அரசின் தடையை மீறி சில மீனவர்கள் கடல் அட்டைகளைப் பிடித்துவருவது தொடர்சியாக நடக்கிறது. இரண்டு நாள்களுக்கு முன், ராமேஸ்வரத்தில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 8 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில், இன்று மண்டபம் வடக்கு கடற்கரைப் பகுதியில், கடல் அட்டைகளைப் பிடித்து பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக மண்டபத்தில் உள்ள கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து, அங்கு சென்ற கடலோர பாதுகாப்புக் குழும போலீஸார், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 300 கிலோ கடல் அட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.  இது தொடர்பாக, மண்டபம் மேற்குத் தெருவைச் சேர்ந்த ஆசிப் அலி என்பவரை போலீஸார் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளை, மண்டபம்  வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். கைப்பற்றப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு, சுமார் ஒரு லட்சம் எனக் கூறப்படுகிறது.