Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

டெங்கு : நெல்லை மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட்!

டெங்கு

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. இதனால், மாவட்டம் முழுவதும் ரெட் அலெர்ட் செய்யப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.

நெல்லை மாவட்டத்தின் கடையநல்லூர், கடையம், சுரண்டை, சங்கரன்கோவில், வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த சில மாதங்களாகவே டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவிவருகிறது. கடந்த 6 மாதமாக இதன் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோதிலும், மாவட்டத்தின் ஒரு பகுதியில் நோய் கட்டுக்குள் வரும்போது, மறு பகுதியில் தீவிரம் காட்டத் தொடங்கிவிடுகிறது.

நெல்லை மாவட்டத்தில், கடந்த 6 மாதத்தில் 1,500-க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று குணம் அடைந்துள்ளனர். சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் 15 பேர் உயிரிழந்துள்ளனர். சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும்  டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள்.  காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில், வீடுகளில் குடிநீரைத் திறந்துவைக்க வேண்டாம் என உள்ளாட்சி நிர்வாகங்கள் மூலமாக மக்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

டெங்கு சிகிச்சை

நெல்லை மாவட்டத்தில், இந்தக் காய்ச்சலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு தொடங்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன்,  டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, சிறப்பு மருத்துவக் குழுவும் சுகாதாரத்துறை சார்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினர், மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க ஏற்பாடுசெய்துவருகின்றனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவரிடம் பேசியபோது, ’’நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. பாளையங்கோட்டை மருத்துவமனையில்  உள்ள சிறப்பு வார்டில், 64 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு கொசு வலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கு அனுமதிக்கப்பட்டிருப்பவர்களில் 24 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்றார்.

இது தவிர, மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் டெங்கு நோயாளிகள் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். களக்காடு பகுதியில் 12-வது படிக்கும் மாணவிக்கு டெங்கு இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவ, மாணவியரிடம் இந்த நோய் வேகமாகப் பரவுவதன் காரணமாக, பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், பீதியில் உள்ளனர். மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இந்த நோய் தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதால், மாவட்டம் முழுவதும் ரெட் அலெர்ட் செய்யப்பட்டு, சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன், டெங்கு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுவருகின்றன.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement