வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (10/08/2017)

கடைசி தொடர்பு:12:56 (10/08/2017)

'இன்னும் ஐந்தாண்டுகளுக்கு சசிகலாதான் கட்சித் தலைவர்!' - வரிந்து கட்டும் தினகரன்

சென்னை லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

edappadi palanisamy
 

இன்று நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, ஜெயக்குமார், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போன்ற சீனியர் தலைவர்களை அழைத்து தனது முடிவைச் சொல்லி, கருத்து கேட்பை நடத்தியிருக்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். " தினகரன் தனி அணியாகச் செயல்படுவதால், கட்சிக்குள் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. தினகரன் ஆதரவில் சில நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்றனர். உதாரணமாக, கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் மக்கள் பிரச்னை ஒன்றுக்காக சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பினர் அதே பிரச்னைக்காக வேறு ஓர் இடத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இப்படி ’ஊரு ரெண்டு பட்டா..கூத்தாடிக்குத்தான் கொண்டாட்டம்’ என்பது போல, கட்சி இரண்டு பட்டதும் எதிர்க்கட்சியினர் குஷியானார்கள். கட்சியின் அதிகாரம் மிக்க பதவியான அமைப்புச் செயலாளர் பதவியில் பலரை தினகரன் நியமித்திருப்பதால், அவர்களுக்கு முக்கியத்துவம் தருவதா? வேண்டாமா? என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குழப்பம் அடைந்தனர். இதையடுத்தே கட்சி நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் முதல்வர்" என்றவர், " தினகரனுக்கு கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. அவரால் நியமிக்கப்பட்டவர்கள் உள்ளூரில் செய்யும் அலப்பரையைத் தாங்கமுடியவில்லை. ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்கள் என்று மக்களாலும், மத்திய அரசாலும் முத்திரை குத்தப்பட்ட சசிகலா தரப்பினர் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை இனியும் அனுமதிக்கமுடியாது " என்கிறார் கொதிப்புடன். 

dinakaran
 

இதுகுறித்து, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ. ஒருவருடன் பேசியபோது, " வருகிற 14-ம் தேதியன்று மேலூரில் தினகரன் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. அன்றே, அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சசிகலாவின் படத்தை வைக்கப் போகிறோம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. துணைப் பொதுச் செயலாராக தினகரன் நியமிக்கப்பட்டது செல்லும். பொதுவாக, கட்சியில் யாரைப் புதிதாக நியமித்தாலும், அதை முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். அப்போதுதான், அந்தப் பதவிக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக கட்சியின் புது நிர்வாகிகள் நியமனம் குறித்து, தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா தகவல் தெரிவிக்கவில்லை. அவரது மரணத்துக்குப் பிறகு, பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார் சசிகலா. அடுத்து வந்த நாட்களில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தார். இந்த நியமனம் பற்றியும் தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று பிரச்னை எழுந்தது.

இதையடுத்து, முறைப்படி தினகரன் நியமனத்தை கடந்த இரண்டு மாதம் முன்புதான் தேர்தல் கமிஷனுக்கு தகவல் தெரிவித்தோம். இதேபோல், தற்போது கட்சியில் தினகரன் நியமித்துள்ள முக்கிய நிர்வாகிகள் பட்டியலையும் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப இருக்கிறோம். இது வெறும் சம்பிரதாயம்தான். தகவல் சொன்னால் போதும். சசிகலாவை பொதுச் செயலாளராக நியமனம் செய்ததில் இருந்து ஐந்து ஆண்டுகள் அவர் அந்தப் பதவியில் இருப்பார். அந்தவகையில், அவர் யாரை நியமித்தாலும் சட்டப்படி செல்லுபடியாகும். எனவே, தினகரனை எடப்பாடி பழனிசாமியால் எந்த வகையிலும் நீக்க முடியாது. இதையும் மீறி எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டால், சட்டரீதியாகவே நியாயம் கேட்போம்" என்றார் விரிவாக. 


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க