வெளியிடப்பட்ட நேரம்: 13:32 (10/08/2017)

கடைசி தொடர்பு:14:20 (10/08/2017)

சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்... ஆபத்தா?! #GoodParenting #SingleChildSyndrome

சிங்கிள் சைல்ட்

'ஒரே ஒரு குழந்தை இருக்கும் குடும்பங்கள் தற்போது பெருகிவிட்டன. இப்படி குழந்தை ஒற்றை ஆளாக வளரும்போது, பிடிவாதம், கோபம், இணைந்து செயல்பட முடியாமை போன்ற குணங்களோடு வளர அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைக்கு Single Child Syndrome என்று பெயர்' - இதுபோன்ற தகவல்கள் சமீப காலங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. 

ஆனால், ''சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்கிற ஒன்று கிடையவே கிடையாது. அது ஒரு குழந்தையோ, இரண்டு குழந்தைகளோ... பெற்றோரின் வளர்ப்புமுறை மட்டும்தான் குழந்தைகளின் இயல்புகளை நிர்ணயிக்கின்றன” என்று தீர்மானமாகச் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன், அது குறித்த தகவல்களையும் நம்மோடு பகிர்கிறார்.

“1900 ஆண்டுகளில் அமெரிக்காவைச் சேர்ந்த மனநல மருத்துவரான ஸ்டான்லி ஹால் என்பவர்தான், இந்த 'சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம்' பற்றி முதலில் பேசினார். அதாவது குடும்பங்களில் ஒற்றை ஆளாக வளரும் குழந்தைகள் மிகவும் சுயநலம் கொண்டவர்களாகவும், பிறரோடு இணைந்து வாழ முடியாதவர்களாகவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். எல்லா ஒற்றைக் குழந்தைகளும் இதுபோன்ற சுபாவங்களைக் கொண்டவர்களாகவே இருப்பார்கள் என்பதுபோன்ற தீர்மானமான முடிவுகளை அவர் வெளியிட்டார்.

ஆனால், 1950 மற்றும் 70களில் ஸ்டான்லியின் கூற்று தவறானது என்று நிரூபிக்கப்பட்டது. அதாவது தனி ஆளாக வளரும் பெரும்பாலான குழந்தைகள், சகோதரர்களோடு சேர்ந்து வளரும் குழந்தைகளைப் போலவே அதிகப் பொறுப்புடனும், பக்குவத்துடனும் வளர்கிறார்கள் என்பதை அடுத்தடுத்து வந்த மனநல மருத்துவர்கள் இந்த உலகுக்குத் தகுந்த ஆதாரங்களின் மூலமாக உணர்த்தினார்கள்.  

இன்றைய காலகட்டத்தையே எடுத்துக்கொள்ளுங்களேன்... ஒரே ஒரு குழந்தை உள்ள வீட்டில், அந்தக் குழந்தைக்கு 'ஷேரிங்' எனப்படும் பகிர்ந்தளிக்கும் குணம் வராது என்பதுதான்  பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், இரண்டு குழந்தைகள் இருக்கும் வீட்டில் அந்தக் குழந்தைகள் ஷேரிங் குணத்தோடுதான் வளரும் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?அதிலும் இன்றைய பெற்றோர், குழந்தைகளுக்கு இடையே சண்டை வரும் என்று பயந்து, அது பொம்மையோ, பண்டமோ எதுவாக இருந்தாலும் இரண்டாக வாங்கி இரண்டு குழந்தைகளிடமும் கொடுத்துவிடுகிறார்கள். இதில் எங்கிருந்து ஷேரிங் பண்பு வளரும்?

நிலைமை இப்படி இருக்க, ஒற்றைக் குழந்தைகள்மீது மட்டும் ஏன் இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வைக்கப்படுகின்றன என்று பார்த்தால், அதன் ஒட்டுமொத்த தவறும் பெற்றோரின் பக்கமே இருக்கிறது. 'நமக்கு இருப்பது  ஒரே ஒரு குழந்தை' என்கிற எண்ணத்தில் குழந்தையைத் தாங்கித் தாங்கி அதன் நல்இயல்புகளை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும் பெற்றோர் தங்களை சரிசெய்து கொண்டால்போதும். மற்றபடி சிங்கிள் சைல்ட் சிண்ட்ரோம் என்பதையெல்லாம் நம்ப வேண்டியதில்லை”  என்கிற மருத்துவர் சுப்ரமணியன், ஒரே ஒரு குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்பது குறித்தும் சொல்கிறார். 

சிங்கிள் சைல்ட்


இதையெல்லாம் செய்யுங்கள்! 

* ஒரே ஒரு குழந்தையாக வளரும்போது, அவர்களுக்கு மற்ற குழந்தைகளோடு இணைந்து வாழ்கிற வாய்ப்புகள் கிடைக்காது. அதனால், குழந்தையை அடிக்கடி உறவுகள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்லலாம். குறிப்பாக விடுமுறை நாள்களில் உறவினர்களின் குழந்தையோடு உங்கள் குழந்தையைத் தங்க வைக்கலாம். இதுபோன்ற வாய்ப்புகள் 'அட்ஜஸ்ட்மென்ட்' பண்பை உங்கள் குழந்தைக்குள் இயல்பாக வரவைக்கும்.

* உங்கள் பிம்பம்தான் உங்கள் குழந்தைகள். அதனால், ஷேரிங் போன்ற விஷயங்களை நீங்கள் முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்களோடு செய்ய ஆரம்பியுங்கள். உங்களைப் பார்த்தே வளரும் உங்கள் குழந்தையும் மெல்ல மெல்ல ஷேர் செய்ய ஆரம்பிக்கும்.

* குறிப்பாக, குழந்தைக்கு சுயமரியாதைப் பண்புகளைக் கற்றுக்கொடுங்கள். பிறகு,'உன்னைப் போலத்தான் பிறரும். அதனால் யாரையும் மரியாதைக் குறைவாக நடத்தக் கூடாது' என்பதையும்  குழந்தைக்குப் புரியும் எளிய மொழியில் சொல்லிக் கொடுங்கள்.

* ஒற்றைக் குழந்தையாக வளரும் பிள்ளைகள், பெரும்பாலான நேரத்தை டி.வி, கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் போன்றவற்றோடுதான் செலவழிக்கிறார்கள். அதற்குப் பதிலாக ஓவியம், கராத்தே, இசை, விளையாட்டுப் பயிற்சிகள் என்று அவர்களின் கவனத்தை சுவாரஸ்யமான வழிகளில் திருப்பலாம். ஆனால் ஒன்று, எக்காரணம் கொண்டும் அவர்களுக்கு விருப்பமில்லாத ஒரு கலையை கற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அவர்களை வற்புறுத்தாதீர்கள். இதனால், அவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம்.

* ஒரே ஒரு குழந்தை என்பதால், குழந்தையின் பண்புகள் சார்ந்த விஷயத்தில் கவனக் குறைவாக இருந்துவிடாதீர்கள். குறிப்பாக 'டேபிள் மேனர்ஸ்' என்று சொல்லப்படும் மற்றவர்களுடனான அவர்களின் 'பழகும் விதத்தை' மேம்படுத்துங்கள்.

* ஒற்றைக் குழந்தைகளை தங்களது கண்காணிப்புக்குள்ளேயே வைத்திருக்கும் பெற்றோர்தான் அதிகம். இப்படி அவர்களை நீங்கள் திருடன் போலக் கண்காணித்தால், அவர்களின் தனித்து இயங்கும் திறன் குறைந்து போகும். அதுமட்டுமல்ல உங்கள்மீது அவர்களுக்கு ஒரு தேவையில்லாத எரிச்சலும் உண்டாகலாம். அதனால் எதற்கெல்லாம் உங்களின் தீவிரக் கண்காணிப்பு தேவைப்படுகிறதோ அதை மட்டும் கவனியுங்கள். மற்றபடி அவர்களை இயல்பாக இருக்க அனுமதியுங்கள்.

* வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவர்களை வெளியே அழைத்துக்கொண்டு செல்லுங்கள். பொது இடங்களில், சூழ்நிலையின் தன்மைக்கு ஏற்ப எப்படி நம்மை அடாப்ட் செய்துகொள்ள வேண்டும் என்பதை அனுபவம் மூலமாக உணர வையுங்கள்.

இதையெல்லாம் தவிருங்கள்! 

* ஒரே குழந்தை என்று அதீத செல்லம் கொடுக்க வேண்டாம். இதை அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு அவர்கள் தவறான பாதையில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. கவனம் ப்ளீஸ்!

* 'நாங்க ரெண்டு பெரும் சம்பாதிக்கிறதே உனக்காகத்தான்' என்கிற ரீதியில் குழந்தையிடம் ஒருபோதும் பேசாதீர்கள். பிறகு இதைச் சாக்காக எடுத்துக்கொண்டு பணத்தின் மதிப்பு புரியாமல் அது வேண்டும், இது வேண்டும் என்று அவர்கள் டிமாண்ட் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

* பிடிவாதத்தை என்கரேஜ் செய்யாதீர்கள். ஒருமுறை நீங்கள் அவர்கள் கேட்பதை ஒத்துக்கொள்ள ஆரம்பித்தால், அதன்பிறகு எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

* குழந்தையுடனான உங்கள் அன்பை விலையுயர்ந்த பொருள்கள் வழியாக ஒருபோதும் வெளிப்படுத்த முனையாதீர்கள். அதற்குப் பதிலாக குழந்தையின் நண்பர்களை சர்ப்ரைஸாக வீட்டுக்கு வரவைப்பது, மொட்டைமாடியில் குடும்பமாய் நிலாச்சோறு சாப்பிடுவது, சைக்கிளில் ஜாலியாகப் பயணம் செய்வது என்று உங்கள் அன்பை எளிமையான முறைகளில் குழந்தைக்கு வெளிப்படுத்திக்கொண்டே இருங்கள். அப்போதுதான் பணத்துக்கு அப்பாற்பட்டு நிறைய நல்ல விஷயங்கள் இருக்கின்றன என்பது குழந்தைக்குப் புரிய ஆரம்பிக்கும்.

* சின்னச் சின்னத் தோல்விகளை உங்கள் குழந்தை அனுபவிக்கட்டும். அப்போதுதான் வளர வளர தோல்வியைக் கண்டு அதிர மாட்டார்கள். அதிலிருந்து மீண்டு வர முனைவார்கள். தோல்வி என்றாலே என்னவென்று தெரியாமல் வளரும் குழந்தைகள்தான் வளர்ந்த பிறகு ஒரு சின்னத் தோல்வி ஏற்பட்டால்கூட அதை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள். அதனால் வெற்றி, தோல்வி இரண்டும் இணைந்ததாய் அவர்களின் குழந்தைப் பருவம் அமையட்டும்.

* உங்கள் குழந்தையை ஒருபோதும் மற்ற குழந்தைகளோடு ஒப்பீடு செய்யாதீர்கள். தொடர்ந்து குழந்தையை மட்டப்படுத்திப் பேச ஆரம்பித்தால் அவர்கள் தங்களின் சிறகுகளை சுருக்கிக் கொள்வார்கள் மனதிற்குள்ளேயே புழுங்கிக் குமைவார்கள்.

* 'என் பையன் நான் ஊட்டினாதான் சாப்புடுவான்', 'நான் இல்லைன்னா என் பொண்ணு தலை வாரக் கஷ்டப்படுவா' என்று இனிமேல் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் வேலைகளைத் தாங்களே செய்யுமாறு குழந்தையைப் பழக்குங்கள். பாசம் காரணமாக நீங்கள் செய்யும் இதுபோன்ற வேலைகள், அவர்களை சோம்பேறிகளாகவும், தனித்து இயங்கும் திறனற்றவர்களாகவும் மாற்றிவிடும் என்பதை மறக்காதீர்கள்.

* ஒரு குழந்தை என்று அதீத பொசசிவ் எண்ணத்தோடு தங்கள் குழந்தையை வளர்க்கும் அம்மாக்கள் அதிகம். நாள்கள் நகர, நகர இது, அம்மா - குழந்தை இருவரின் வாழ்க்கையிலுமே கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதனால் குழந்தையிடம் இயல்பான ஒட்டுதலோடு இருங்கள். உங்கள் குழந்தை, மற்றவர்களோடு இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகளையும் கொடுங்கள்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்