'ஜெயலலிதா இடத்தில் வேறு யாருமில்லை..!' தலைமைக்கழக தீர்மானத்தின் முழு விவரம் | Full detail of Edappadi Palanisamy team resolution

வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (10/08/2017)

கடைசி தொடர்பு:13:57 (10/08/2017)

'ஜெயலலிதா இடத்தில் வேறு யாருமில்லை..!' தலைமைக்கழக தீர்மானத்தின் முழு விவரம்

'டி.டி.வி.தினகரனின் அறிவிப்புகள் கட்சியைக் கட்டுப்படுத்தாது' என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

edappadi palanisamy team


முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், 'அ.தி.மு.க-வின் நிரந்தரப் பொதுச் செயலாளராக பணியாற்றிய ஜெயலலிதாவின் இடத்தில் வேறு யாரையும் வைத்து கழகத் தொண்டர்கள் பார்க்க மாட்டார்கள்.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பிறகு, கழக விதிகளின்படி சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்திருந்தாலும், அதனால் கட்சியில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. எனவே, கழகத்தின் சட்டத்திட்ட விதி 20 (V)-ன் படி ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள், கட்சியையும் ஆட்சியையும்  வழிநடத்திவருகிறோம். ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து 2011-ம் ஆண்டு நீக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை மீண்டும் 14-02-2017-ம் ஆண்டு கட்சியில் சேர்த்தாகக் கூறி, அவருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கியது கட்சி சட்டவிதி 30(V)-க்கு விரோதமானது.

ஏற்கெனவே, ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில் டி.டி.வி.தினகரனின் பெயர் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம்செய்த வழக்கு, தேர்தல் ஆணையத்தில் இருந்துவருகிறது. இந்த நிலையில், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தினகரன் தன்னிச்சையாக புதிய நிர்வாகிகள் பெயரை வெளியிட்டிருப்பது அ.தி.மு.க தொண்டர்கள் எவரையும் கட்டுப்படுத்தாது.

அவரது அறிவிப்புகள் எதுவும் கழக விதிகளின்படி செல்லத்தக்கவை அல்ல. எனவே, கட்சித் தொண்டர்கள் தினகரனின் நியமனத்தை நிராகரிக்க வேண்டும். எனவே, நாம் அனைவரும் ஒன்று கூடி, கழகத்தையும் ஆட்சியையும் வழி நடத்துவோம்' என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்தத் தீர்மானத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட 27 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.