கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ்! பெங்களூரை இன்று வீழ்த்துமா? #ProKabaddi | Will Tamil Thalaivas beat Bangalore Bulls?

வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (10/08/2017)

கடைசி தொடர்பு:16:03 (10/08/2017)

கடைசி இடத்தில் தமிழ் தலைவாஸ்! பெங்களூரை இன்று வீழ்த்துமா? #ProKabaddi

புரோ கபடி சீசன் ஐந்தில் கிட்டத்தட்ட  இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. மொத்தம் 12 அணிகள் விளையாடும் இந்த லீக் தொடரில் இரண்டு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ன. 'அ' மண்டலப் பிரிவில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டான், ஹரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஃபோர்ச்சூன் ஜெயன்ட்ஸ், தபாங் டெல்லி,  யு மும்பா,  ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. 

முதல் பிரிவைப் பொறுத்தவரையில், கடுமையான போட்டி நிலவுகிறது. புனே அணி இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறது. ஆனால், இரண்டிலும் வென்று அந்த அணியே முதலிடத்தில் இருக்கிறது. யு மும்பா மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஹரியானா மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு டிரா என மூன்றாவது இடத்திலும் உள்ளன. குஜராத் அணி நான்காவது இடத்திலும், டெல்லி ஐந்தாவது இடத்திலும், ஜெய்ப்பூர் ஆறாவது இடத்திலும் உள்ளன. டெல்லி அணி நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியைத் தழுவியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் ஜெய்ப்பூர் அணி இதுவரை ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடியிருக்கிறது. எனவே, ஜெய்ப்பூர் உடனடியாக பதற்றப்படத் தேவையில்லை. 

தமிழ் தலைவாஸ்

'ஆ' மண்டலத்தைப் பொறுத்தவரையில் பெங்களூரு புல்ஸ், பாட்னா பைரேட்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியஸ், யு பி யோதா, தமிழ் தலைவாஸ் ஆகிய அணிகள் முறையே ஒன்று முதல் ஆறாவது இடம் வரை பிடித்துள்ளன. பெங்களூரு புல்ஸ் அணி ஆறு போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகள் ஒரு டிராவுடன் 19 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் கெத்தாக அமர்ந்திருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ்  நிலைதான் பரிதாபம். அந்த அணி ஏழு போட்டிகளில் ஒரே ஒரு வெற்றியுடன் வெறும் 11 புள்ளிகளை மட்டுமே எடுத்திருக்கிறது. பாட்னா பைரேட்ஸ் அணி இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அந்த அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ஒன்றில் கூட தோற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் தலைவாஸ் அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியிருக்கிறது. இரண்டு போட்டியிலும் வெற்றிக்காக போராடி கடைசி நேரத்தில் தோற்றது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடுமையாகப் போராடியது. எனினும் பெங்களூரு அணியின் புத்திசாலித்தனமான ஆட்டத்தால் ஒரு புள்ளி வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. 

இந்நிலையில், இன்றைய தினம் நாக்பூர் மான்கபூர் உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் போட்டியில் இரவு ஒன்பது மணி ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும் தமிழ் தலைவாஸ் அணியும் மல்லுக்கட்ட உள்ளனர். பெங்களூரு அணிக்கு இது ஏழாவது போட்டியாகும். ரோகித் தலைமையிலான அணி இந்த லீக் தொடரில் இதுவரை அருமையாக ஆடி வருகிறது. குறிப்பாக ரெய்டுகளில் கலக்குகிறது. ஆஷிஷ் குமார், மகேந்திர சிங் ஆகியோர் பெங்களூரு அணிக்கு மேட்ச்  வின்னர்களாக திகழ்கின்றனர். 

தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் அஜய் தாகூர் இன்னும் முழு ஃபார்முக்கு திரும்பவில்லை. அவரது ரெய்டுகளில்தான் அணியின் வெற்றி இருக்கிறது. தமிழக வீரர் பிரபஞ்சன் சிறப்பாக ரெய்டு சென்று புள்ளிகளை வென்று வருகிறார். எனினும் அவர் மேட்ச் வின்னிங் பெர்பார்மென்ஸ் காட்டுவது அவசியம். டாங் ஜியோன் லீ தமிழ் தலைவாஸுக்கு நிச்சயம் துருப்புச் சீட்டாக இருப்பார். இன்னொரு தமிழக வீரர் அருண்  நிலையற்ற ஃபார்மில் இருக்கிறார். அவர் முதல் பாதி சொதப்பினால் இரண்டாவது பாதி நன்றாக  ஆடுகிறார். ஒரு போட்டியில் நாற்பது நிமிடமும் கவனம் செலுத்தி  ஆரம்பத்தில் இருந்தே எதிரணி வீரர்களை வீழ்த்தினால் தமிழ் தலைவாஸ் விறுவிறுவென முன்னேறலாம். பெங்களூரு இப்போதைக்கு தமிழ் தலைவாஸ் அணியை விட வலுவான அணியாகவே விளங்குகிறது. எனினும் இந்தப் போட்டியில் அந்த அணியின் அதிர்ச்சிகரமான முடிவுகளை எதிர்பார்க்கலாம்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close