வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (10/08/2017)

கடைசி தொடர்பு:14:30 (10/08/2017)

மண்ணுக்குள் புதைந்த மண்பாண்டம்!

சிவகங்கை மாவட்டம்,  மானாமதுரையில் பெய்த மழையால் மண்பாண்டம் செய்யும் தொழில் பாதிப்படைந்துள்ளது.

மண்பாண்டம் என்றாலே அது மானாமதுரை என்று சொல்லும் அளவுக்கு பெயர்பெற்றது. இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழில் செய்துவருகிறார்கள். ஆடி மாதம் என்பதால் மாரியம்மனுக்கு முளைப்பாரி திருவிழா தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதற்கான மண் ஓடுகள் இங்கு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இங்கு பெரிய அளவிலான விநாயகர் சிலை செய்துவருகின்றனர். இந்த இரண்டு வேலைகளும் நடைபெற்று வரும் நிலையில் கடந்த இரண்டு நாள்களாக பெய்த மழையால் செய்துவைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை, முளைப்பாரிக்கான மண் ஓடு மற்றும் களிமண் போன்றவை கரைந்து ஓடியது.

மண்பாண்டம் செய்து காயவைத்திருக்கும் இரண்டு செட்களுக்குள் மழை தண்ணீர் புகுந்ததால் பெருமளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டம் மட்டும் சுமார் ஒரு லட்சத்தைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டிருப்பதாக மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள்.

அந்த தொழிலாளர்களிடம் பேசும்போது... ''ஆடி, ஆவணி மாதங்களில் எங்களுக்கு முளைப்பாரிக்கான ஓடு, விநாயகர் சதுர்த்திக்கான விநாயகர் செய்ய நிறைய ஆர்டர்கள் வந்திருக்கிறது. இந்த நேரம் பார்த்து மழை பெய்ததால் எங்கள் தொழில் பாதிப்படைந்துள்ளது. கால்வாய்கள் தூர்வாரப்படாததால் தண்ணீர் முழுவதும் எங்கள் பகுதிக்குள் வந்துவிட்டது. அரசாங்கம், மழைக் காலங்களில் எங்களுக்கு  தொழில் பாதிப்பு இல்லாமல் இருக்கும் வகையில் பராமரிப்பு செட்களை அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க