மழை வேண்டி கூட்டு வழிபாடு செய்த கரூர் மக்கள்!

                   

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் மாவட்டத்தில் நிலவும் வறட்சி நீங்கவும், மழை பொழியவும் வேண்டி நால்வர் பாடிய மழை பொழிய வைக்கும் பதிகங்களை பாடி சிவனடியார்கள் கூட்டு வழிபாடு நடத்தி வருகிறார்கள். இன்று கரூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடந்த கூட்டு வழிப்பாட்டில், சிவ கொடியேற்றி, திருப்பதிகங்களைப் பாடி, சிவனுக்கு விண்ணப்பம் வைத்துக் கூட்டு வழிபாடு நடத்தினர். ஏராளமான பொதுமக்கள் இந்தக் கூட்டு வழிப்பாட்டில் கலந்துகொண்டனர். மொஞ்சனூர் புனிதப் பேரவை என்ற ஆன்மிக அமைப்புதான் இந்த கூட்டு வழிபாட்டை நடத்தி வருகிறது. அந்த அமைப்பின் தலைவர் டி.கே.எம்.சிவ குணசேகரனிடம் பேசினோம்.

 

"தமிழகமே கடுமையாக வரலாறு காணாத வறட்சியில் தத்தளிக்கிறது. குறிப்பா, எங்க கரூர் மாவட்டம் வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது. விவசாயம் செய்ய விடுங்கள், மக்கள் குடிக்கவே தண்ணீர் கிடைக்காமல் அள்ளாடி வருகிறார்கள். வறட்சியின் பிடியில் மக்கள் தவிப்பதற்கு காரணம் சிவனை குளிர்விக்காதததுதான். அதனால்தான், இத்தகைய கடும் வறட்சி. அதனால்தான், எங்க அமைப்பு சார்பாக நால்வர் பாடிய திருப்பதிகங்களைப் பாடி, மக்களை, சிவனடியார்களை இணைத்து மாவட்டத்தில் உள்ள சிவாலயங்கள்தோறும் கூட்டு வழிபாடு நடத்தி, சிவனிடம் மழை வேண்டி விண்ணப்பம் வைக்கத் தீர்மானித்தோம். இதற்காக, எங்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, திருப்பதிகங்களை அறிந்த நாற்பதுக்கும் மேற்பட்ட சிவனடியார்களை இணைத்து, இந்தக் கூட்டு வழிபாட்டை நடத்தி வருகிறோம். கடந்த 8-ம் தேதி மொஞ்சனூரில் உள்ள ஆவுடைநாதர் திருக்கோயிலில் இந்தக் கூட்டு வழிபாட்டை துவக்கினோம். தொடர்ந்து, மூன்று நாள்களில் சின்னதாராபுரத்தில் முக்திமுனீஸ்வரர், தென்னிலையில் உள்ள தேவேந்திரலிங்கேஸ்வரர் கோயில், இன்னைக்கு கரூர் பசுபதீஸ்வரர் கோயில்ன்னு பதினெட்டு சிவாலயங்களில் கூட்டு வழிபாட்டை முடித்துள்ளோம்.

அடுத்து, மாவட்டம் முழுக்க உள்ள சிவாலயங்களில் அடுத்தடுத்து கூட்டு வழிபாடு நடத்த இருக்கிறோம். தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில் உள்ள மக்கள் எங்களை அழைத்தால், அங்கேயும் சென்று கூட்டு வழிபாடு நடத்தத் தயாராகவே இருக்கிறோம். நாங்கள் இந்த வழிபாட்டை ஆரம்பித்த 8-ம் தேதியில் இருந்து கரூர் மாவட்டத்தில் தினமும் மழை பெய்கிறது. வறட்சி நீங்கி, தேவையான மழை பொழிவை பெறும் வரையில் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து சிவாலயங்களிலும் இந்த கூட்டு வழிபாட்டை நடத்த இருக்கிறோம். அந்தந்தப் பகுதி மக்களும் நாங்கள் நடத்தும் இந்த கூட்டு வழிபாட்டில் ஆர்வமுடன் கலந்துகொள்கிறார்கள்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!