வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (10/08/2017)

கடைசி தொடர்பு:15:00 (10/08/2017)

ஆஹா... அசத்தும் அரசுப் பள்ளிகள்! பலே பாரம்பர்ய விளையாட்டுகள்!

நவீன காலகட்டத்தில் நமது பாரம்பர்ய முறைகளையும் விளையாட்டுகளையும் ஒதுக்கிக்கொண்டே வருகிறோம் . 'விளையாடுங்கள் உடல் பலமாகுங்கள்' என்ற நிலை மாறி, செல்போன்களில் நம் வாழ்க்கை முறை முழுமையாக மூழ்கிவிட்டது . தற்போது, நமது தொன்மையான விளையாட்டுகளை அரசுப் பள்ளிகளும் ,அரசு உதவிபெறும் பள்ளிகளும் மீண்டும் கொண்டுவந்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை. இது தொடர்பாக, மேலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சூரியகுமார் தெரிவித்ததாவது ...

தமிழகத்தின் நமது தொன்மையான விசயங்களை மீட்டெக்கும்  வகையில், பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தளின்படி, அரசு சார்ந்த பள்ளிகளில் மாதம்தோறும் கடைசி வெள்ளி அன்று பாரம்பர்ய விளையாட்டுக்களான தாயம் , ஆடுபுலி ஆட்டம் , கோலி , நொண்டி உள்ளிட்ட பல விளையாட்டுகளை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுத்து, போட்டிகள் நடத்த அறிவுறுத்தியுள்ளது . இது, பல பள்ளிகளில் நல்ல செயல்பாட்டில் உள்ளது . இதற்கு, மாவட்டம்தோறும் ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் செயல்பட்டு, பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மேற்பார்வையில் செயல்படுத்திவருகின்றனர் . மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக நான் தேர்வுசெய்யப்பட்டு செயல்பட்டுவருகிறேன்.

பள்ளிகளில் பசுமைப் படை , சாரணர் படை போன்று செயல்படும் அமைப்பைப் போல, இந்தத் தொன்மையான விளையாட்டுக்கும் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது . இதில் பாரம்பர்ய விளையாட்டுகள் மட்டுமன்றி பண்டைய கலாச்சாரம் , இலக்கியம் எனப் பலவற்றைச் சொல்லிக்கொடுப்பதுதான் இந்த தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தின் முயற்சி. இந்த விளையாட்டுகளைச் சொல்லிக்கொடுப்பதால் தற்போது பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆர்வத்தோடு பள்ளிக்கு வருகின்றனர் எனத் தெரிவித்தார் .

இப்படியான விளையாட்டு முறையை அரசுப் பள்ளிகளில் கொண்டுவந்தது நல்ல விசயம்தான். ஆனால், பள்ளியில் பிற அமைப்புகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகளை போல இந்த மன்றங்களுக்கும் அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் விருப்பமாக உள்ளது .