வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (10/08/2017)

கடைசி தொடர்பு:14:00 (11/08/2017)

எடப்பாடி பழனிசாமிக்கு, தினகரனின் 10 கேள்விகள்!

 

கட்சியின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதால் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழக்க நேரிடும் என்று டி.டி.வி. தினகரன் எச்சரித்துள்ளார். 

தினகரன்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்தவிதத்திலும்  கட்டுப்படுத்தாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், துணைப் பொதுச்செயலாளராக  தினகரன் நியமிக்கப்பட்டது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், 


1.அ.தி.மு.க அம்மா அணி என்ற பெயருடன் அறிக்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தீர்மானத்தில் அ.தி.மு.க என்று குறிப்பிடப்பட்டுள்ளது தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு எதிரானது. கட்சியின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளனர். 


2.இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் யாராவது புகார் அளித்தால், அந்த அறிக்கையில் கையெழுத்திட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரும்  பதவியை இழக்க நேரிடும். தீர்மானத்தின் நகலை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால், அமைச்சரவை பதவி பறிபோகும். 


3.சசிகலாவால் முதலமைச்சராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அதேபோல், துணைப் பொதுச்செயலாளராக என்னை நியமித்தவர் பொதுச்செயலாளர் சசிகலா. ஆகவே துணைப் பொதுச்செயலாளராக நான் செயல்பட எந்தவிதத் தடையும் இல்லை. கட்சியின் விதிகளுக்குட்பட்டுதான் துணைப் பொதுச்செயலாளராக என்னை சசிகலா நியமித்தார். 


4.சசிகலாவால் கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசனின் நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் இவர்களால், துணைப் பொதுச்செயலாளராக எனது நியமனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறுவது என்ன நியாயம்?

 
5.நியமனப் பதவிகளை அறிவிக்க கட்சியின் பொதுச்செயலாளருக்கு அதிகாரம் உண்டு. கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதும் இதுபோன்ற நியமனங்கள் நடந்துள்ளன. ஜெயலலிதா இருந்தபோது கட்சியில் இணைந்த நாஞ்சில் சம்பத்துக்கு, உடனடியாக கொள்கைப் பரப்பு துணை செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. 


6.பதவியைக் காத்துக் கொள்ளவும் பயத்தின் காரணமாகவும் சிலர் விளைவிக்கும் குழப்பத்தால் கட்சிக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. 


7.தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் துணைப் பொதுச்செயலாளர் என்று எனது பெயரை குறிப்பிட்டுவிட்டு, மற்ற இடங்களில் வேறுவிதமாக பேசி வருகின்றனர். 


8.கட்சியின்  வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். பதவிக்காக கட்சியின் விதிகளை மீறுவது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும்  நடவடிக்கை எடுக்கப்படும். 


9.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட 60 நாள்கள் கெடு முடிந்ததால், கட்சிப் பணியாற்றத் தொடங்கிவிட்டேன். கட்சியிலிருந்து என்னை வெளியேற்ற யாரும் அழுத்தம் கொடுப்பதாக நினைக்கவில்லை. மடியில் கனம் இருப்பதால் அமைச்சர்கள் சிலர் என்னை வெளியேற்ற  திட்டமிடுகின்றனர். 


10.பதவியில் இருக்கிறவரையில் அமைச்சர்கள் சுருட்டிக்கொண்டு செல்வதில் தீர்க்கமாக இருக்கிறார்கள்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க