வெளியிடப்பட்ட நேரம்: 16:29 (10/08/2017)

கடைசி தொடர்பு:17:19 (10/08/2017)

’நான் எதிர்பார்த்தது இதைத்தான்!’- தினகரனின் அடுத்த அதிரடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரனுக்கு எதிராக இன்று அதிரடி முடிவை எடுத்துள்ளார். அந்த முடிவு குறித்து தினகரன், தனக்கு நெருக்கமானவர்களிடம் 'இதை முன்பே எதிர்பார்த்தேன்' என்று சொல்லியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

dinakaran ttv

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று காலையில் நடந்தது. கூட்டத்தில் தினகரனின் துணைப் பொதுச் செயலாளர் பதவி மற்றும் அவர் நியமித்த கட்சி நிர்வாகிகளின் பதவிகள் அ.தி.மு.க சட்ட விதிகளுக்கு எதிரானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இத்தீர்மானம் தினகரனின் ஆதரவாளர்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது. தினகரனின் ஆதரவாளர்களான வெற்றிவேல் எம்.எல்.ஏ., தங்கத் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ., கர்நாடக மாநிலச் செயலாளர் புகழேந்தி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் இந்தத் தீர்மானத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தினகரன் பதவி விவகாரத்தை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தனர். 

இந்தத் தகவல் தினகரனுக்குத் தெரிவிக்கப்பட்டபோது அவர் தஞ்சாவூருக்குச் சென்று கொண்டிருந்தார். தகவல் கிடைத்ததும் 'இந்த முடிவை முன்பே எதிர்பார்த்தேன்' என்று சிரித்தப்படி சொல்லியிருக்கிறார். அடுத்து, 'தன்னுடைய ஆதரவாளர்கள் யாரும் உணர்ச்சிவசப்பட வேண்டாம். பொறுமையாக இருங்கள். சட்டப்படி பிரச்னைகளை எதிர்கொள்வோம்' என்று தினகரன் கட்டளையிட்டுள்ளதாக அவர்களது ஆதரவாளர்களுக்குத் தகவல் சொல்லப்பட்டுள்ளது. இதனால், தினகரனின் தீவிர ஆதரவாளர்கள்  அமைதியாக உள்ளனர். தினகரனின் அடுத்த அறிவிப்புக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். 

இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்களிடம் பேசினோம். 'சந்தான லெட்சுமி படத்திறப்பு விழாவுக்காக தினகரன், தஞ்சாவூர் சென்றுள்ளார். அந்த விழாவில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. அதற்குள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தினகரனுக்கு எதிராக இன்று தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர். அதை எப்படி எதிர்கொள்ளலாம் என்று தினகரன் ஆலோசனை நடத்தி முடிவை அறிவிப்பார். அதுவரை நாங்கள் அமைதியாக இருக்கிறோம். தினகரனை கட்சிப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டும்தான் உள்ளது. சொற்ப நபர்கள் மட்டுமே தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினரைத் திருப்திப்படுத்தவும் பிரதமர் மோடியின் விசுவாசி என்பதை நிரூபிக்கவும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

திட்டமிட்டப்படி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை நடத்துவோம். மேலூர் கூட்டத்துக்கு வரும் தொண்டர்கள் கூட்டத்தைப் பார்த்து எங்களது கட்சிப் பலத்தை எதிரணியினர் தெரிந்துகொள்ளட்டும். கட்சிக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துரோகம் செய்வார். அப்போதுதான் பன்னீர்செல்வத்தின் உண்மை முகம் தெரியும். ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்பதைப் போல ஆட்சி, கட்சி அதிகாரத்துக்காக முட்டி மோதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே அணியில் நீண்டகாலம் இருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க.வை அழித்த பெருமை அவர்களுக்கே சேரும். சசிகலாவைச் சந்தித்துவிட்டு தினகரன், அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை அறிவிப்பார். அதுவரை அமைதியாக இருப்போம்' என்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவர், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்திடம் உள்ளது. இதனால் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. தினகரன், நீக்கத்தால் ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த ஆபத்தும் இருக்காது. ஏனெனில் சசிகலா குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும். சசிகலா குடும்பத்தினருக்கும் அ.தி.மு.க.வுக்கும் இனி எந்த தொடர்பும் இருக்காது. அதையும் மீறி அவர்கள் குடும்பத்தினரால் கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி வந்தால் அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும்' என்றார்.

தஞ்சாவூரில் தினகரனின் மாமியார் சந்தான லெட்சுமியின் படத்திறப்பு விழா நாளை நடக்கிறது. இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தஞ்சாவூருக்கு புறப்படத் தயாராக இருந்தனர். அவர்களில் பலர், தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவுக்குப் பிறகு படத்திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.