வெளியிடப்பட்ட நேரம்: 20:41 (10/08/2017)

கடைசி தொடர்பு:20:41 (10/08/2017)

ஷியா வக்ப் போர்டுக்கு உரிமை உண்டா, இல்லையா? - ஜவாஹிருல்லா - ஹெச்.ராஜா மோதல்

'அயோத்தியில், ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம்' என ஷியா வாரியம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததையடுத்து,  நாடெங்கும் மறுபடியும் சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கியுள்ளன.

அயோத்தி

ஷியா வாரியத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் ஆதரவும் ஒருசேரக் கிளம்பிவரும் நிலையில், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவிடம் இதுகுறித்துப் பேசியபோது,

''பிரச்னைக்கு உரிய அந்த இடம் யாருக்கு சொந்தம்... என்பதுதான் வழக்கு. இதுசம்பந்தமாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோதே தீர விசாரித்து, சம்பந்தப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்றுதான் நியாயமாகத் தீர்ப்பளித்திருக்க வேண்டும். ஆனால், கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைத்தான் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிற்று. அதே தவறை உச்சநீதிமன்றமும் செய்துவிடக்கூடாது. 'இடம் யாருக்குச் சொந்தம்' என்றுதான் தீர்ப்பளிக்கவேண்டும்.

இத்தனை ஆண்டுகாலமாக இந்த வழக்கினை  நடத்திவருவது உத்தரப் பிரதேச சுன்னத் ஜமாத் வக்ப் போர்டுதான். எனவே, இப்பிரச்னையில், உத்தரப்பிரதேச ஷியா மத்திய வக்ப் வாரியம் சம்பந்தப்படவே இல்லை. ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோதும்கூட, இவர்கள் வழக்கில் சம்பந்தப்படவில்லை. இந்த நிலையில், மத்திய மோடி அரசின் தூண்டுதலினாலும், சதியினாலும் இப்படியொரு நிலைப்பாட்டை ஷியா மத்திய வக்ப் வாரியம் எடுத்திருக்கிறது. 

ஜவாஹிருல்லா

'தங்களுக்கு சாதகமான ஒரு தீர்ப்பு வரவேண்டும்' என்ற எண்ணத்திலேயே மோடி அரசாங்கம் இப்படியொரு சதித் திட்டத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள்'' என்றார் உறுதியாக.

தமிழக பி.ஜே.பி-யில் அதிரடி கருத்துகளைத் தெரிவித்துவரும் அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம், ஷியா வக்ப் போர்டின் நிலை குறித்தும், அந்த நிலைக்கு எதிராகக் கிளம்பிவரும் கருத்துகள் குறித்து விளக்கம் கேட்டோம்....

''இந்த வழக்கு 1948-ல் இருந்தே தொடங்கிவிட்டது. சம்பந்தப்பட்ட இடத்தில் ராமர் சிலை வைத்து வழிபாடு தொடங்கிய அந்தக் காலகட்டத்திலேயே அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடுத்தவர்கள் ஷியா வக்ப் போர்டுதான். 

2010-ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்கூட, 'இந்த இடத்தில் கோவில் இருந்தது. அதை நீக்கித்தான் மசூதி கட்டப்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். சம்பந்தப்பட்ட இடத்தில்,  ராம ஜென்ம பூமி நியாஸ் அமைப்பு மற்றும் அங்கே இருந்த கோவில் டிரஸ்டி என 2 பாகம் இந்துக்களுக்கு. 3-வது பாகம் ஷியா வக்ப் போர்டுக்கு. ஒரிஜினலாக வழக்கு தொடுத்ததே ஷியா வக்ப் போர்டுதான். எனவே, சன்னி இஸ்லாமியருக்கு இதில் சம்பந்தமே கிடையாது. 'நியாயமான தூரத்தில் மசூதியைக் கட்டிக்கொள்கிறோம்' என்று ஷியா தரப்பினரே சொல்லிவிட்டனர். 

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் அகழ்வாராய்ச்சி செய்து, ஏற்கெனவே அங்கே கோவில் இருந்ததை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கிலும்கூட 2 இந்து நீதிபதிகளும் சேர்ந்து கொடுத்திருக்கும் தீர்ப்பில், 'கோவிலை இடித்து அதன்மீது  கட்டப்பட்டது' என்று குறிப்பிட்டுள்ளார்கள். மற்றொரு இஸ்லாமிய நீதிபதியோ, 'கோவில் இடித்த இடிபாடின் மீது கட்டப்பட்டுள்ளது'  என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது 'இடித்துக் கட்டியது' என்ற வார்த்தையை தவிர்த்திருக்கிறார். எனவே, அங்கே ஏற்கெனவே கோவில்தான் இருந்தது என்பதை 3 நீதிபதிகளுமே ஒப்புக்கொள்கிறார்கள்.

ஹெச்.ராஜா 

என்னைப்பொருத்தவரையில், அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி முழுவதுமே இந்துக்களுக்குச் சொந்தம். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பில் 3-வது பாகம் ஷியா வக்ப் போர்டுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர்களும்கூட, 'நாங்களே இந்த இடத்தை விட்டுக்கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுகிறோம்' என்று சொல்லிவிட்டதால், ஒட்டுமொத்தமாக வழக்கே முடிவுக்கு வந்துவிடுகிறது. 
2004-லேயே இந்த முடிவைக் கிட்டத்தட்ட நாங்கள் நெருங்கினோம். அதாவது ஒரிஜினல் வழக்குதாரர்களான ஷியா பிரிவினர் அப்போதே விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருந்தார்கள்.  ஆனால், அப்போது வாஜ்பேயி அரசு தேர்தலில் தோற்றுப்போனதால், தீர்வு கிடைக்காமல் போனது. சுருக்கமாகச் சொன்னால், அயோத்தியில் உள்ள முஸ்லிம்கள் விட்டுக்கொடுக்கத் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், மதவெறியைத் தூண்ட நினைப்பவர்கள்தான் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்'' என்று வெடித்துமுடித்தார் ஹெச்.ராஜா!

சர்ச்சைகள் ஓய்வதில்லை! 


டிரெண்டிங் @ விகடன்