'ஸ்டாலினுக்குக் காழ்ப்பு உணர்ச்சி காய்ச்சல்!'- விளாசிய விஜயபாஸ்கர்

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கு வந்துள்ள காழ்ப்பு உணர்ச்சி காய்ச்சலை எந்த மருந்தாலும் குணப்படுத்த முடியாது என்று சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'டெங்குவை ஒழிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைள் உலகத்தரம் வாய்ந்தவை' என்று கூறி அவற்றை பட்டியலிட்டுள்ளார். மேலும் அந்த அறிக்கையில், ’டெங்குவைக் கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை அறியாதவர் போல பூனைக் கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டுவிட்டது என்று நினைத்துக் கொள்ளும் என்ற வகையில் உண்மைக்கு மாறான ஒரு வெற்று அறிக்கையை வெளியிடும் பொறுப்பான பதவியில் இருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் பொறுப்பற்ற செயல் கண்டனத்துக்குரியது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற வகையில் பொறாமை நோயில் அவர் புழுங்கித் தவிக்கிறார். நோய்கள் வரும் முன் காப்பதிலும் பரவாமல் தடுப்பதிலும் நிமிடத்திற்கு நிமிடம் நடவடிக்கை எடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறை சுறுசுறுப்புடன் செயல்பட்டு வருகிறது. டெங்கு போன்ற எந்தக் காய்ச்சலையும் ஓட ஓட விரட்டச் செய்யும் வல்லமை தமிழக அரசுக்கு உண்டு. ஆனால், எதிர்கட்சித் தலைவருக்கு என் மீது ஏற்பட்டுள்ள காழ்ப்புஉணர்ச்சிக் காய்ச்சல் எந்த மருந்தாலும்  குணப்படுத்த முடியாத ஒன்று. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயத்திற்காக வெளியிட்டு வரும் அறிக்கைகள் மூலம் களத்தில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் களப்பணியாளர்களின் தன்னலமற்ற சிறப்பான சேவையைக் கொச்சைப்படுத்திட வேண்டாம்' என்று அன்புடன் கேட்டுக்கொள்வதாக விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!