வெளியிடப்பட்ட நேரம்: 17:49 (10/08/2017)

கடைசி தொடர்பு:17:49 (10/08/2017)

''கைக்காசுக்கு யாரையும் எதிர்பார்க்கிறதில்லை!" - வீட்டிலிருந்தே கிராஃப்ட் தொழிலில் அசத்தும் அஜந்தா

ம்மைச் சோதிக்கும் இக்கட்டான காலகட்டங்களே நம் திறமையை நமக்கு உணர்த்தும் சக்தி. அப்படிப்பட்ட சக்தியை அஜந்தா உணர்ந்தது அவருடைய கணவரின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில். இன்று, அஜந்தா வீட்டிலிருந்தே மாதம் பத்தாயிரம் சம்பாதிக்கும் கிராஃப்ட் கலைஞர். அவரிடம் பேசினோம்.

அஜந்தா

''என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த சமயம். குடும்பமே பதறிப்போயிருந்தோம். அப்போ, சாமி ஊர்வலம் எங்க வாசல் வழியா போயிட்டிருந்தது. மனசு உடைஞ்சு போயிருந்த நான் வெளியவந்து என்ன சாமினு பார்த்தேன். கங்கையம்மன் சாமியோட ஊர்வலம் அது. 'ஆத்தா தாயே... என் வீட்டுக்காரரை சுகமாக்கிக் கொடு: அடுத்தமுறை நீ எங்க வாசல் வழியா வர்றப்போ, நானே என் கையால உனக்கு அலங்காரப் பொருள்கள் செஞ்சு சாத்தறேன்’னு மனசார வேண்டிக்கிட்டேன். அம்மன் அருளால என் வீட்டுக்காரருக்கு குணமாச்சு. இதுதான் என்னோட பிஸினஸ்க்கான ஆரம்பப்புள்ளி. சாமி கிட்ட வேண்டிகிட்டபடியே ஜடை, மாலை, நகைகள்னு என் கையால செஞ்சு அம்மனுக்கு சாத்தினேன். அதிலிருந்தே ஏதாவது மனக்கஷ்டமா இருந்தா, சுவாமி சிலைகளுக்கு ஏற்ற மாதிரியான மாலைகள், ஆடை அலங்காரம், ஜடை மாட்டினு செய்ய ஆரம்பிக்க மனசு நிம்மதியாகும்.

என் நெருங்கின தோழி விஜிகிட்ட, 'ஏதாச்சும் கைத்தொழில் செய்ய வாய்ப்பு இருந்தா சொல்லு. எனக்கு அப்படி செய்றதுக்கான வாய்ப்பு கிடைக்கலியே''னு புலம்பிட்டு இருந்தேன். அவதான் நான் சாமிக்காக செய்ற கிராஃப்ட் பொருள்களைப் பார்த்துட்டு, 'இதையே நீ ஏன் ஒரு தொழிலா கன்வர்ட பண்ணக்கூடாது'னு கேட்டா'' என்று தன் வாழ்க்கையில் ஏற்பட்ட பளிச் மாற்றத்தைப் பற்றிச் சொன்னார் சாந்தா. 

 அதுக்குப் பிறகுதான் ஜுவல்லரி, சாமி மாலை, ஜடை, கிஃப்ட் பவுச், பேங்கிள்ஸ், பேங்கிள் பவுச், கோல்டன் ட்ரீஸ், சாட்டின் மாலை, ஆரத்தி தட்டுனு பலவிதமான கிராஃப்ட் வேலைப்பாடுகளை செய்ஞ்சு ஃபேன்ஸி ஸ்டோர்களில் விற்பனைக்காகக் கொடுத்துட்டு இருக்கேன். தவிர, ஒரு தனியார் ஸ்கூல்ல சனிக்கிழமை மட்டும் 4, 5-ம் வகுப்பு குழந்தைகளுக்கு எம்ப்ராய்டரி கிளாஸ் எடுக்கிறேன். ஆதரவற்ற குழந்தைகளுக்கு அப்பப்போ இலவச வகுப்புகளும் எடுக்கிறேன். எங்க வீட்டுல என்னோட சேர்த்து பத்து பேர். ஸோ, பெத்தவங்களால ஒவ்வொருத்தரையும் தனித்தனியா கவனிக்க முடியாத சூழ்நிலை. எனக்கு பதினோரு வயசானப்ப அம்மா தவறிட்டாங்க. அப்பா பாய் வியாபாரம் செய்ஞ்சு எங்களை கவனிச்சுகிட்டார். குடும்ப சூழல் தெரிஞ்சு நான் பிளஸ்டூ முடிச்ச கையோட தனியார் பள்ளியில வேலைக்குச் சேர்ந்தேன். நாலு வருஷம் வேலை, வீடுனு ஓடுச்சு. நல்ல இடத்துல திருமணம் முடிஞ்சது. செனனி யனாவரத்துலதான் குடும்பம் நடத்தினோம். அன்பான கணவர் முரளி, குழந்தை, சமையல், விளையாட்டுனு போயிட்டு இருந்தது. என் பொண்ணு ஸ்கூலுக்குப் போக ஆரம்பிச்சதும் வீடே வெறிச்சோடிக் கிடக்கும். அந்த நேரத்தை கழிக்கவே நான் கிராஃப்ட் கத்துக்க ஆர்மபிச்சேன். அதுதான் என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த இக்கட்டான சூழ்நிலையில என்னை பிஸினஸ் விமன்ங்கிற பாதைக்கு மாத்துச்சு.

இப்போ மாசம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. கை செலவுக்கெல்லாம் கணவரை எதிர்பார்க்கத் தேவை இல்லாம, சுயதொழிலால நானே வருமானம் பார்க்குறதுல இரட்டிப்பு சந்தோஷம். இதுக்கு சின்ன அளவுல முதலீடும், கைத்திறனும் இருந்தா போதும். மாசம் 15 ஆயிரம் சுலபமா சம்பாதிக்கலாம். முதல்ல, அக்கம்பக்கம், நட்பு வட்டத்துக்கு நீங்க செய்யும் கிராஃப்ட் பொருள்களை சாம்பிளா கொடுத்து பயன்படுத்தச் சொல்லுங்க. அப்புறம் அவங்களே உங்களுக்கு ஆர்டர் கொடுக்கறதோட, தெரிஞ்சவங்களுக்கும் அறிமுகப்படுத்தி வைப்பாங்க. வெற்றி தன்னால வந்து சேரும்!'' என்று நம்பிக்கை கொடுக்கிறார், 46 வயதாகும் அஜந்தா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்