"திருமண பத்திரிகை அடிக்கும் வயதில் முரசொலி பத்திரிகை அடித்தவர் கலைஞர்"

முரசொலி பத்திரிகையின் 75 வது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றுவருகிறது. 

முரசொலி' பத்திரிகையின் காட்சி அரங்கத்தை, இன்று காலை, இந்து என்.ராம் தொடங்கிவைத்தார். இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தி.மு.க தலைவர் கருணாநிதியால் முரசொலி நாளிதழ் தொடங்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதை முன்னிட்டு, தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பவள விழாவுக்கு ஏற்பாடுசெய்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டுள்ளார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இவர்கள் தவிர, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும்  கலந்துகொண்டுள்ளனர். விழா தொடங்கியதும், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்களால், முரசொலி நாளிதழின் முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முரசொலி விழாவில் பல்வேறு பத்திரிகை ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விழாவில், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், இந்து ஆசிரியர் ராம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 இந்த விழாவில் பங்கேற்று பேசிய கவிஞர் வைரமுத்து, "முரசொலி பவளவிழாவுக்கு யாரை அழைத்தால் சரியாக இருக்கும் என்பதை சரியாக உணர்ந்து இந்த விழாவில் பத்திரிகையாளர்களை அழைத்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுகள். திருமண பத்திரிகை அடிக்கும் வயதில் முரசொலி பத்திரிகை அடித்து அதை சுமந்தவர் கலைஞர்" என்றார்.
   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!