நீதி கேட்டு நெடிய போராட்டம்... ஒரு துப்புரவுத் தொழிலாளியின் சோகக் கதை! | A tragedic story of sweeper

வெளியிடப்பட்ட நேரம்: 19:58 (10/08/2017)

கடைசி தொடர்பு:17:56 (05/10/2017)

நீதி கேட்டு நெடிய போராட்டம்... ஒரு துப்புரவுத் தொழிலாளியின் சோகக் கதை!

காளி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா ஆழிமதுரை கிராமத்தில் வசித்துவருபவர் காளி. இவர் ஒரு துப்புரவு தொழிலாளி.  இவரது குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக துப்புரவு தொழில் செய்து வருகிறார்கள். செய்யும் தொழிலுக்கு கூலியாக நெல், மிளகாய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை வருடக் கூலியாக கிராம மக்களிடம் பெற்றுக்கொள்வது வழக்கம். இவர்களின் வாழ்க்கைத் தரம் குப்பைகளை விட கீழ் நிலையில் அல்லாடிக்கொண்டிருக்கின்றது. இந்த வாழ்க்கையிலும் நீதிக்காக கடந்த 5  வருடங்களாகப் போராடிவருகிறார். அவரின் போராட்டம்தான் என்ன? அவரது வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது? 

இனி காளியே மனம் திறந்து பேசுகிறார்....

''எனக்கு வெவரம் தெரிஞ்ச நாள்லேருந்து நான் துப்புரவு தொழில்தான் செஞ்சுட்டு  இருக்கேன். இருபது வருசமா எங்க ஊர் பஞ்சாயத்துத் தலைவரா இருந்த விஸ்வநாதன் தீபாவளி, பொங்கல் சமயங்கள்ல எனக்கு வேட்டி - சட்டை எடுத்துத் தருவாரு.  எப்பவாச்சும் கையில செலவுக்குப் பணம் கொடுப்பாரு. அதுதான் நான் செய்யுற வேலைக்கான கூலி. பிறகு என்னை பஞ்சாயத்துல தோட்டியா வேலைக்கு சேர்த்துட்டாரு. அப்ப எனக்கு சம்பளம் 150 ரூபா. அந்த சம்பளத்த நம்பி எனக்குக் கல்யாணம் பண்ணி வச்சாங்க. ஆண்டவன் புண்ணியத்துல எனக்கு மூணு பொம்பள புள்ளை, மூணு ஆம்பள புள்ளைங்க இருக்கு. ஊர்ல அய்யாக்கமார்கள் கொடுக்குறத வச்சு பொழப்ப நடத்திட்டு இருந்தேன்'' என்று வாழ்க்கைக் கதையை சொன்னவர் நீதிக்கான போராட்டம் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

''1997-ம் ஆண்டுக்கு முன்னாடி வரையிலும் தமிழகம் முழுவதும் கிராமப் பஞ்சாயத்துல துப்புரவு தொழிலாளிகள் எவ்வளவு பேரு வேலை பாக்குறோம்னு அரசாங்கத்துக்கே தெரியாது. மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சிகாரவுங்கதான்  போராடி எங்களுக்கு அரசாங்கத்துல ரெக்காடு உண்டுபண்ணி கொடுத்தாங்க. சிவகங்கை மாவட்டத்துல மட்டும் 445 பஞ்சாயத்துல கிராமத்த சுத்தம் பண்ணுறவுங்க, தண்ணி மோட்டார் ஆபரேட் பண்றவங்கனு எல்லோரையும் கணக்கு எடுத்தாங்க. அதுக்கு முன்னாடி வரையிலும் நான் கிராமத்துல பார்த்த வேலையெல்லாம் தர்மத்துக்காகப் பார்த்தது மாதிரி ஆகிப்போச்சு. எங்களுக்கும் கால முறை ஊதியம், அரசு ஊழியர் எஸ்.ஆர் புக் என எல்லா வசதியும் செஞ்சு கொடுத்தாங்க. கலெக்டர் ஆபீஸ்ல கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனரா இருந்த பாப்பாத்தியம்மாள்தான் இதையெல்லாம் செஞ்சு கொடுத்தாங்க. தண்ணி போட்டுவிடுற ஆப்ரேட்டர் 1,500 பேர், கிராம துப்புரவு தொழிலாளிகள் 445 பேர் இருக்காங்கனு அறிக்கை கொடுத்தாங்க.  அந்தக் காலத்துல படிப்பு எங்களுக்கு எங்கே இருந்துச்சு.  படிப்பு இருந்தால் அந்த சர்டிபிகேட், இல்லாட்டி பொறந்த சர்டிபிகேட், அதுவும் இல்லாட்டி டாக்டரு சர்டிபிகேட்னு வாங்கி ரெக்கார்டு கிரியேட் பண்ணிட்டாங்க. எஸ்ஆர் புக் ரெடியாயிடுச்சு. எனக்கு டாக்டரு கொடுத்த சர்டிபிகேட் வச்சு எஸ்ஆர் புக் ஓப்பன் பண்ணிட்டாங்க. துப்பரவு தொழிலாளிக்கு 500 ரூபாய் சம்பளம், தண்ணி போட்டு விடுறவுங்களுக்கு 1,500 ரூபாய் சம்பளம்... இதுவரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல.

வீரய்யாகடந்த உள்ளாட்சி தேர்தல்தான் என்னோட உசுரை சுக்கு நூறா ஆக்கிட்டுப் போயிருச்சு. பிரசிடென்டா வந்த மலைச்சாமி என்னோட வேலையில விளையாட ஆரம்பிச்சார். ஒரு நாள், 'காளி இங்கே வா... நீ எனக்கு ஓட்டு போடல... எனக்காக பஞ்சாயத்து தேர்தல்ல வேலை செய்யல... எனக்கு எதிர் டீம்ல வேலை பார்த்த உன்னைய  நான் ஏன் வேலைக்கு வச்சுருக்கணும். நீ போயிட்டு வா வேலை இல்லை. நான் சொல்லும் போது திரும்ப வா' னு சொல்லி அனுப்பிட்டாரு மலைச்சாமி. அப்பவே, 'அய்யா சாமி நான் இந்த வேலைய வச்சுதான் கஞ்சி குடிச்சுட்டு இருக்கேன். நீங்க திடீர்னு இப்படிசொன்னா நான் எங்கே போவேன்... நம்ம ஊருக்காக உழைச்சு ஓடா தேஞ்சு போனவன் நான்' அப்படினு சொல்லி பிரசிடென்ட் மலைச்சாமி கால்ல கும்பிட்டு விழுந்தேன். 'சரி அஞ்சாயிரம் ரூபா கொடு, நான் உன்னை பெர்மனன்ட் பண்ணுறேன்'னு பணத்தை வாங்குனாரு. வேலைய முடிச்சும் கொடுக்கல. 2012-ம் ஆண்டு உனக்கு 60 வயசு ஆச்சு. உன்னை ரிட்டையர்டு பண்ணியாச்சுனு சொல்லி வேலைக்கே வராதேனு சொல்லிட்டாரு மலைச்சாமி. ஆனால் 2010-ம் ஆண்டு இளையான்குடி அரசு மருத்துவமனையில் உள்ள டாக்டர் எனக்கு 50 வயசுனு சர்ட்டிபிகேட் கொடுத்திருக்காரு. அப்படிப் பார்த்தால், என்னோட ரிட்டையர்டுமெண்ட் 2020-ம் ஆண்டு தான் வருது.

எங்க ஊர் அரசாங்க பள்ளியில நான் 1955-ம் ஆண்டு 1-ம் வகுப்பு படிச்சதா தலைமை ஆசிரியர் செண்பகவள்ளி அறிக்கை கொடுத்ததாக மலைச்சாமி சொல்லுறாரு. ராமநாதபுரத்துல இருக்குற லேபர் டிபார்ட்மெண்ட் அதிகாரிகள் விசாரணை நடத்தினாங்க. அந்த விசாரணையில, என்னோட வயசைக் கூட்டிக் காட்டணும்னு எஸ்ஆர் புக்ல திருத்தி எழுதினது, ஒரு இடத்துல சக்கிலியர், இன்னொரு இடத்துல பள்ளர்னு மோசடி செய்யப்பட்டிருந்ததுனு எல்லாத்தையும் கண்டுபிடிச்சாங்க. இத எல்லாத்தையும் வச்சு லேபர் ஆபீசர் விசாரணை பண்ணுனாங்க. அப்ப மலைச்சாமி, 'நான் எஸ்ஆர் புக்ல எதுவும் எழுதல... பழைய பிரசிடென்ட்தான் கையெழுத்து போட்டுருக்காங்க'னு சொன்னாரு. உடனே பழைய பிரசிடென்ட் அருள்மேரிய வரச்சொல்லி விசாரணை செய்தார்கள். 'என்னோட காலத்துல எஸ்ஆர் புக் ஓப்பன் பண்ணல. இதுல இருக்குறது என்னோட கையெழுத்தும் இல்லை'னு அவங்களும் சொல்லிட்டாங்க. சரினு  எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா பைல் பண்ணி கலெக்டர்கிட்ட கொண்டாந்து கொடுத்தேன். கலெக்டரம்மா பார்த்துட்டு 'அட கடவுளே'னு சொல்லிட்டு, ஒருமாசத்துல வேலைபோட்டு தர்றேன்னு சொன்னாங்க. சரி இங்கே எனக்கு நீதி கிடைச்சுரும்னு நினைச்சு சந்தோசப்பட்டேன். கடைசியில பார்த்தா எனக்குக் கடிதம் வந்தது. அதில், நீங்க மெடிக்கல் போர்டு டெஸ்ட்டுக்கு வரணும்னு இருந்தது. 2015-ம் ஆண்டு மெடிக்கல் போர்டுக்கு போனபோது சுமார் 60 வயது இருக்கும்னு சொன்னாங்க. ஆனால், கலெக்டரம்மா 'எனக்கு துல்லியமா விபரம் வேணும்'னு சொன்னாங்க. 45 வயசுக்கு மேல மெசின் துல்லியமாக் காட்டாதுனு மெடிக்கல் போர்டுல இருந்து  ரிப்போர்ட் கொடுத்துட்டாங்க.

இப்படியே நான் நீதிக்காக போராடிக்கிட்டு இருந்ததுனால, குடும்பத்தை வழி நடத்த சித்தாள் வேலைக்குப் போனேன். அங்கேயும் என்னைய விதி விடல... ஒயரமான கட்டடத்துல இருந்து கீழே விழுந்துட்டேன். எலும்பு ஒடஞ்சு கிடந்தேன். அந்த சமயத்துல, நான் வேலை பார்த்த சம்பளப் பாக்கியாச்சும் கொடுங்கனு பஞ்சாயத்துல கேட்டேன். மனசாட்சியே இல்லாதவுங்க இன்னமும் எனக்கு சேர வேண்டிய பணத்தைக் கூட கொடுக்கல. உள்ளாட்சி தேர்தல் வந்தாலும் வந்துச்சு என் வாழ்க்கையை சுனாமியாக்கிட்டு போயிருச்சு. இவ்வளவு ஆதாரம் வச்சுருந்தும் எனக்கு நீதி கிடைக்காம போயிருச்சே... அத நினைச்சாத்தான் கவலையா இருக்கு. இப்ப நான் மதுரை உயர்நீதிமன்றத்துல கேஸ் போடக்கூட பண வசதியில்லாமல் தடுமாறிக்கிட்டு இருக்கேன்'' என்கிறார் கண் கலங்கியபடி.

 காளிக்கு பாதுகாப்பாளராக இருக்கும் சி.ஐ.டி.யு சிவகங்கை மாவட்டச் செயலாளர் வீரைய்யாவிடம் பேசும் போது... ''ஆழிமதுரை அரசு ஆரம்ப பள்ளியில காளி படிச்சதா சான்றிதழ் கொடுத்ததாக சொல்லப்படுவது பொய். மாவட்டக் கல்வி அதிகாரி, தொடக்கக் கல்வி அதிகாரிகள்ட்ட இதுபற்றிக் கேட்டால், முப்பது வருசத்துக்கு மேல ஆயிடுச்சு... ஆவணம் எதுவும் எங்கக்கிட்ட இல்லைனு சொல்லுறாங்க. அப்ப எப்படி செண்பகவள்ளி டீச்சர் சர்டிபிகேட் கொடுத்தாங்க? அவுங்க மேல விசாரணை நடத்தணும்னு கோர்ட்ல வழக்கு போட இருக்கிறேன்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close