Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஓராண்டைக் கடந்த கூடங்குளம் அணு உலை! ஸ்டேட்டஸ் ரிப்போர்ட்!

அணு உலை

கூடங்குளம் முதலாவது அணுஉலையில் வணிகரீதியிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்தாண்டு இதே நாளில் நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. 

 

கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான குரல் தொடர்ந்து ஒலித்தபடியேதான் இருக்கிறது. ஆனால், அதை எல்லாம் மீறி அடுத்தடுத்து அணுஉலைகள் செயல்பாட்டுக்கு வந்தபடியே இருக்கவும் செல்கின்றன. இரு அணுஉலைகள் மட்டுமே அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில்... தற்போது அங்கு அணுஉலைப் பூங்கா அமைக்கப்படவிருக்கிறது. எதிர்ப்புகளை மீறி மூன்று மற்றும் நான்காவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கிவிட்டன.

 

இது தவிர, கூடுதலாக இரு அணுஉலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுத் தயார் நிலையில் இருக்கிறது. அடுக்கடுக்காக அணுஉலைகள் வரவிருக்கும் நிலையில், தற்போது செயல்பாட்டில் உள்ள இரு அணுஉலைகளுமே அடிக்கடி பழுது ஏற்பட்டு நிறுத்தப்படுகின்றன. ’அணு சக்தி அழிவு சக்தி’ என்று அணுஉலை எதிர்ப்பாளர்கள் சொல்லும் நிலையில், ’அணு சக்தி ஆக்க சக்தி’ என்று அரசும் அணுஉலை நிர்வாகமும் சொல்கின்றன. இருக்கிற அணுஉலைகளை மூடுமாறு எதிர்ப்பாளர்கள் கோரிவரும் நிலையில், கூடுதல் உலைகளை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்தச் சூழலில், என்னதான் நடக்கிறது கூடங்குளம் அணுஉலை வளாகத்தில்?  

 

போராட்டம்

அணுஉலை மீதான அச்சம்! 

 

இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி ரஷ்ய அதிபராக இருந்த மிக்கேல் கோர்ப்பசேவ் ஆகியோரால் 1988-ல் விதைக்கப்பட்ட அணுஉலைக்கான விதை போடப்பட்டது. பின்னர், ரஷ்ய யூனியன் உடைந்து சிதறுண்டதும் இந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் இந்த ஒப்பந்தம் 1996-ல் தூசி தட்டி எடுக்கப்பட்டது. அடுத்த இரு வருடங்களுக்குப் பின்னர், இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் கூடங்குளத்தில் அணுஉலைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரஷ்ய அரசின் ஒத்துழைப்புடன் 12,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடங்குளத்தில் இரு அணுஉலைகளை அமைக்க 2001-ல் முடிவு செய்யப்பட்டதுடன், மறு வருடமே கான்கிரீட் அமைக்கும் பணிகள் தொடங்கின. இடையிடையே, பொதுமக்களின் எதிர்ப்பும் மேலோங்கியது. அரசியல் காரணங்களுக்காக உள்ளூர் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் இந்தப் போராட்டங்களை நடத்துவதும், அவர்களுக்கு அணுஉலைக்கான கட்டுமானப் பணிக்கான ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட்டதும் சத்தமின்றி இருப்பதுமாக இருந்தது. 

2011-ல் முதலாவது அணுஉலைக்கான சோதனை ஓட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் சப்தம் சுற்றுப்புற மக்களிடம் பெரும் அச்சத்தைக் கிளப்பியது. அத்துடன், அணுஉலை நிர்வாகத்தினர் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான பிட் நோட்டீஸ்களை விநியோகித்தனர். அதில், அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் எனத் தெரிவித்ததைப் பார்த்ததும் மக்களின் அச்சம் மேலும் அதிகரித்தது. தங்களுக்கு வெகு அருகாமையிலேயே எமன் பாசக்கயிற்றுடன் அமர்ந்து இருப்பதாகவே அணு உலையை மக்கள் பார்க்க ஆரம்பித்தனர். இதன் காரணமாகப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. தனித்தனியாகப் பிரிந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து ’கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்திப் போராட்டத்தின் வீரியத்தை அதிகரித்தனர். போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக சுப.உதயகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்துடன், புஷ்பராயன், மைபா.ஜேசுராஜ், மில்டன், பின்னர் முகிலன் எனப் பலரும் இந்தக் குழுவில் இணைந்தனர். போராட்டம் இதன்பின்னரே தீவிரம் அடையத் தொடங்கியது.

 

அணு உலை முற்றுகை

போராட்டத்துக்கு இடையே இயங்கிய அணுஉலை!

 

அணுசக்திக்கு எதிரான போராட்டக் களத்தின் தலைமை கேந்திரமாக இடிந்தகரை கிராமம் மாறியது. கூடங்குளம் இடிந்தகரை, கூட்டப்புளி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்ச்சியாக இரண்டு வருடங்களைக் கடந்தும் உண்ணாவிரதம் இருந்தனர். அணுஉலை முற்றுகை, கடலுக்குள் இறங்கிப் போராட்டம், ரஷ்ய பிரதமருக்குக் கடிதம் அனுப்புதல், பிரதமருக்குக் கடிதம் எழுதுதல் என சாத்வீக முறையில் போராட்டங்கள் தொடர்ந்தன. ஒருகட்டத்தில், போலீஸார் தடியடி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 

 

ஒருபக்கம் எதிர்ப்புக் கிளம்பியபோதிலும், மறுபக்கம் தொடர்ச்சியாக அணுஉலையில் பணிகள் நடைபெற்று வந்தன. அத்துடன் அணுசக்தித் துறையின் அனுமதியுடன் பலகட்ட சோதனைகளும் நடத்தப்பட்டு வந்தன. அதன்படி, அணுஉலையில் மாதிரி எரிபொருள் நிரப்பிச் சோதனைகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றிகரமான முடிவுகள் வந்ததால் அணுஉலையில் யுரேனியம் நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 163 யுரேனியம் குச்சிகள் அணுஉலையில் வைக்கப்பட்டன. அந்தப் பணிகள் நிறைவடைந்த பின்னர், 2013-ல் ஜூலை 11-ம் தேதி இரவு 11.05 மணிக்கு முதலாவது அணு உலையில் மின்சார உற்பத்தி தொடங்கியது. பின்னர், ஆகஸ்ட் 22-ம் தேதி இந்த அணு உலையிலிருந்து வணிகரீதியிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது நாட்டின் 21-வது அணுஉலையாகும். 21 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்தப் பணிகள் முடிவடையும்போது திட்டமிடப்பட்ட மதிப்பையும்விடவும் செலவுகள் அதிகரித்தன. அணுஉலைக்கான பணிகள் குறித்த காலத்தில் முடிவடையாமல் காலதாமதம் ஏற்பட்டதால் 12,500 கோடி ரூபாய்க்குப் பதிலாகக் கூடுதலாக 4,000 கோடி ரூபாய் செலவு ஏற்பட்டது. அதனால், மொத்தம் 17,500 கோடி ரூபாயில் பணிகள் முடிவடைந்ததுடன் மின்சார உற்பத்தியும் செய்யப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ச்சியாக அணுஉலையில் சோதனைகள் நடத்தப்பட்டன். சிலவேளைகளில், அணுஉலையில் ஏற்பட்ட சிறிய பழுதுகள் காரணமாக மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டு அதைச் சரிசெய்து மீண்டும் இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2016 ஜூலை 10-ம் தேதி முதலாவது அணு உலையானது நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.  இந்த அணு உலையானது, நாட்டுக்கு அர்ப்பணம் செய்யபப்ட்ட நிகழ்ச்சியின்போது 6,465 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 

 

போராட்டம்

கூடங்குளம் அணுஉலையில் யாருக்கு... எவ்வளவு மின்சாரம்?

 

அணுஉலைக்கான விதி போடப்பட்டு 28 வருடங்களுக்குப் பின்னர், அணுஉலையின் முதலாவது அலகை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கலந்துகொண்டனர். தமிழக அமைச்சர் தங்கமணி கூடங்குளம் அணுஉலையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிரதமர் முதல் அணு உலையை நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்தார். கூடங்குளம் அணுஉலையைப் பொறுத்தவரையிலும், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். நாட்டிலேயே அதிக மின் உற்பத்தி செய்யப்படக் கூடிய அணுஉலை இது என்பது கூடுதல் சிறப்பு. அணுஉலைக்கான பணிகள் தொடங்கப்பட்டபோதே, அணுஉலையில் யாருக்கு எவ்வளவு மின்சாரம் கொடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்தது. கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பவர் கிரீட் எனப்படும் மின்பகிர்மான அமைப்பின் மூலமாகப் பல்வேறு மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் 1,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்துக்கு 462.50 மெகாவாட், கர்நாடகாவுக்கு 221 மெகாவாட், கேரளாவுக்கு 133 மெகாவாட், புதுச்சேரிக்கு 33.50 மெகாவாட், தெலங்கானாவுக்கு 50 மெகாவாட் பகிர்ந்து அளிக்கப்படும் என ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. எஞ்சிய 100 மெகாவாட் மின்சாரத்தை அணு சக்தி நிர்வாகம் தங்களுடைய சொந்தத் தேவைகளுக்காகக் கையில் வைத்துக்கொள்ள முடிவு செய்திருந்தது. 


கடல் முற்றுகை

தமிழகத்துக்குக் கிடைத்த கூடுதல் மின்சாரம்!

 

அணுஉலைக்கு எதிரான போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் மின்சாரத்தின் தேவை அதிகமாக இருந்தது. அதனால், உலையிலிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் தமிழகத்துகே கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுவடையத் தொடங்கியது. இதுதொடர்பாக அப்போதைய முதல்வரான ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம் எழுதினார். அதையடுத்து, தமிழகத்துக்குக் கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரத்தைக் கொடுக்க மத்திய அரசு சம்மதித்தது. அதனால், மொத்தம் உள்ள 1,000 மெகாவாட் மின்சாரத்தில் தமிழகத்தின் பங்காக 562.50 மெகாவாட் கிடைக்கிறது. அணுஉலை நிர்வாகம் தனது சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 100 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழகத்துக்குக் கொடுத்துவிட்ட நிலையில், தங்களின் தேவைக்கு என்ன செய்கிறது? ’’அணு உலை நிர்வாகத்தின் சார்பாகக் கடற்கரையோரத்தில் 10 காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காற்றாலையும் 1.5 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடியது. அதன் மூலமாகக் கிடைக்கும் 15 மெகாவாட் மின்சாரத்தின் மூலமாக வளாகத்தின் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது'’ என அணுஉலை நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.   

 

அத்துடன், இரண்டாவது அணுஉலையும் மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தொடங்கியது. அதிலிருந்து கிடைக்கும் 562.50 மெகாவாட் மின்சாரமும் தமிழகத்துக்குக் கிடைக்கத் தொடங்கியது. இந்த நிலையில், 2016 அக்டோபர் 13-ம் தேதி கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை அமைப்பதற்கான தோண்டும் பணிகள் தொடங்கின. பிரதமர் மோடி இதை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தபோது, இரண்டாவது அணு உலையையும் நாட்டுக்கு அர்ப்பணிப்பு  செய்தார். 

 

கடல் முற்றுகை

தொடரும் வழக்குகள்... கவலையில் மக்கள்!

 

அடுத்தடுத்து அணுஉலைகள் அமைக்கப்படுவது தொடர்பாக அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழுவின ஒருங்கிணைப்பாளரான சுப.உதயகுமாரனிடம் கேட்டதற்கு, ‘’அணு உலைக்கு எதிராகப் போராடிய அப்பாவி கிராமத்தினர் உள்ளிட்டவர்கள்மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்ட பின்னரும், தேசத்துக்கு எதிராகப் போராடியது உள்ளிட்ட பல வழக்குகளில் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. ரஷ்யாவிலிருந்து தரமற்ற உதிரிப்பாகங்களைக் கொண்டு முதல் இரு அணுஉலைகள் அமைக்கப்பட்டிருப்பதால், அவற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய இயலாது என்பதைத் தொடர்ந்து நாங்கள் சொல்லி வருகிறோம். அதேபோல இந்த உலைகளில் அடிக்கடி பழுது ஏற்படுகின்றன. இப்போது கூட இரு அணுஉலைகளும் செயல்படாமல் பழுதடைந்து கிடக்கின்றன. பராமரிப்புக்காக நிறுத்தப்படுவதாகச் சொன்னாலும் மாதக்கணக்கில் மூடிவைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட இந்த அணுஉலைகளால் மக்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதுகிறோம். விபத்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்குவது யார் என்பதில் உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை. பாகங்களை வழங்கிய ரஷ்ய நிறுவனம் இழப்பீடு வழங்க முடியாது எனத் தெரிவித்துவிட்டது. அணுஉலையின் கட்டுமானம், உதிரிப் பாகங்கள் வாங்கியது ஆகியவற்றில் முறைகேடு நடந்திருக்கிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். முதல் இரு அணுஉலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்த மக்களின் கருத்துக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் அணுஉலைகளை அடுத்தடுத்து தொடங்குகிறார்கள். இந்தப் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி, சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் வாய்ப்பு அதிகம் இருக்கும்போது நாசத்தை ஏற்படுத்தக்கூடிய அணுசக்தி மின் உற்பத்திக்கான அவசியம் என்ன வந்தது’’ எனக் கேள்வி எழுப்பினார். 

 

இதுகுறித்து கூடங்குளம் அணுஉலை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ’’கூடங்குளம் அணு உலையானது சர்வதேச அளவில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது என்பதால் இதில் விபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை. வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைச் சீற்றத்தின்போதும் எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த உலைகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அணுசக்தியில் இருந்து பெறப்படும் மின்சாரம் குறைந்த செலவில் கிடைக்கிறது. அத்துடன் சுற்றுச்சூழலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லாதது. அதனால் அணுசக்தியை ஆக்கச்சக்தியாகப் பயன்படுத்துவதில் தவறில்லை. பொதுமக்களிடம் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தாமல் இருப்பதே நல்லது’’ என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement