வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (10/08/2017)

கடைசி தொடர்பு:09:05 (11/08/2017)

”கிரண்பேடி புதுச்சேரியின் எதிரி!”- ஆளுநரை விளாசிய அமைச்சர்...

"மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஆளுநருக்கு அதிக அக்கறை இருக்குமா?” என ஆளுநர் கிரண் பேடியை அமைச்சர் கந்தசாமி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரி துறைமுகம் மேம்படுத்தும் திட்டம் குறித்து ஆளுநர் கிரண் பேடிக்கும் புதுச்சேரி அரசுக்குமான மோதல் விஸ்வரூபம் எடுத்திருக்கின்றது. 'துறைமுத்தை மேம்படுத்தும் திட்டத்துக்கு புதுச்சேரி அரசு போதுமான முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை' என்று குற்றம் சுமத்திய கிரண் பேடி, அதுகுறித்த பல கேள்விகளை சமூக வலைதளத்தில் எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், இன்று துறைமுகப் பணிகளைப் பார்வையிட வந்த அமைச்சர் கந்தசாமி பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “துறைமுகம் தொடர்பாக பல்வேறு புகார்களை ஆளுநர் தொடர்ந்து கூறி வருகிறார். துறைமுகம் தூர் வாருவது ஒன்றும் புதிய செயல் அல்ல. அது வழக்கமான ஒன்றுதான். சென்னை துறைமுகத்துடன் போட்டிருக்கும் ஒப்பந்தப்படி 50 சதவிகிதம் செலவினங்களை சென்னை துறைமுகமே ஏற்றுக்கொள்கிறது.

அதற்காக துணைத் தலைமைப் பொறியாளர் ஒருவரை சென்னை துறைமுகமே புதுச்சேரி துறைமுகத்துக்கு அதிகாரியாக நியமித்திருக்கிறது. புதுச்சேரி துறைமுகத்துக்குக் கப்பல்கள் வந்து செல்வதால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மேல் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முடியும். துறைமுகத்தையும், கடற்கரை மறுசீரமைப்புத் திட்டத்தையும் தவறான முறையில் இணைத்துப் பொதுமக்களிடம் குறை கூறி வருகிறார் ஆளுநர் கிரண்பேடி. இந்தத் திட்டம் தொடர்பாக தொடர்ந்து அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பேசி வருகிறார். துறைமுகத்தில் தனியார் போக்குவரத்து ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஆளுநர் விரும்புகிறார். துறைமுகம் மற்றும் விமானப் போக்குவரத்துத் திட்டத்தை புதுச்சேரி அரசு நேரடியாகச் செயல்படுத்தியது. அந்த ஆதங்கத்தில்தான் ஆளுநர் தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றார். புதுச்சேரி அரசின் திட்டங்களை நிறுத்துவதிலேயே ஆளுநர் குறியாக இருக்கிறார். அவரின் இப்படியான செயல்களால் பிற தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியில் தொழில் தொடங்க முன் வரவில்லை. ஆக மொத்தம் ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் எதிரியாக செயல்பட்டு வருகிறார். மண்ணின் மைந்தர்களான எங்களுக்கு இருக்கும் அக்கறையைவிட வெளி மாநிலத்திலிருந்து வந்திருக்கும் ஆளுநருக்கு அதிக அக்கறை இருக்குமா ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க