வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (10/08/2017)

கடைசி தொடர்பு:09:01 (11/08/2017)

'நாங்கள் அகதிகளாக இருக்க வேண்டுமா?' - கொதிக்கும் அரியலூர் மாவட்ட கிராம மக்கள்..!

அரியலூர், நொச்சிக்குளம் அருகே ரசுலாபுரம் உள்ளிட்ட 4 கிராமங்கள் உள்ளன. இந்த 4 கிராமத்துக்கும் கிராம நிர்வாக அலுவலகம் ரசுலாபுரம் கிராமத்தில் கடந்த 13 ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. தற்போது இந்த அலுவலகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி கிராம மக்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிர்வாக வசதிக்காக ரசுலாபுரத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் நொச்சிக்குளம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த ரசுலாபுரம் கிராம மக்கள் கலெக்டரிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் வி.ஏ.ஒ அலுவலகம் இடமாற்றம் செய்யக் கூடாது என்று கிராம நிர்வாக அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

          

'வி.ஏ.ஓ அலுவலகத்தை இடமாற்றம் செய்யக் கூடாது. இடமாற்றம் செய்யப்பட்டால் ரசுலாபுரம் கிராம மக்கள் வி.ஏ.ஓ அலுவலகத்துக்குச் செல்ல காட்டாறான மருதையாற்றைக் கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எங்களை அகதிகளாகத்தான் இந்த அரசு முயற்சி செய்கிறதா? அரசின் இந்த முடிவால் கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, வி.ஏ.ஓ அலுவலகம் ரசுலாபுரத்திலேயே தொடர்ந்து செயல்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், கிராம மக்கள் சார்பில் கலெக்டர் ஆபிஸை தொடர் முற்றுகை போராட்டங்கள் நடத்தப்படும்' என கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.