வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (10/08/2017)

கடைசி தொடர்பு:08:46 (11/08/2017)

108 ஆம்புலன்ஸ் சேவைக்கு வலிமை சேர்க்கும் கல்லூரி மாணவர் குழு!

விபத்து, பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் உன்னதப் பணிகளைச் செய்து வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு மேலும் வலிமை சேர்க்கும் விதமாக, 'தோழமை 108'  என்ற பெயரில் ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் பங்கேற்கும் மாணவர்கள் விபத்து நடந்த இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் வந்து சேரும் முன்பு உரிய முதலுதவிகளைச் செய்து, அந்த விபத்தில் சிக்கியவரை மீட்கும் பணிக்கு உதவுவார்கள்.  

108 ஆம்புலன்ஸ் - தோழமை குழு

அதன்படி, முதற்கட்டமாக, சென்னை அடையாறில் உள்ள பெட்ரிசியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களும் 'நமது தோள்கள்' அறக்கட்டளையும் சேர்ந்து சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தியுள்ளனர். மேலும், அடிப்படையான முதலுதவி பயிற்சிகளையும் அவசர காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் '108 நண்பர்கள் குழு'  உருவாக்கப்பட உள்ளது. 

இதை சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், "ஒரு விபத்து நடக்கும்போது, அங்கு பாதிக்கப்பட்டவரை உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல், உடனடியாக அவருக்கு முதலுதவிகள் செய்ய வேண்டியதும் முக்கியமானது. அதில், என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதைப்போல, என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பது குறித்தும் விழிப்புஉணர்வு பெற வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு உதவிட போய், அது பாதிக்கப்பட்டவருக்கு மேலும் ஆபத்தாகப் போய்விடக் கூடாது. உன்னத நோக்கத்துடன் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாது, நாம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார். 

உடன், 108 ஆம்புலன்ஸ் மார்க்கெட்டிங் மற்றும் தகவல் பிரிவின் தலைவர் பிரபுதாஸ்,  திரைப்பட நடிகர் ஆரி, மனித உரிமை கமிஷன் பார் அசோசியேஷன் செயலரும், வழக்கறிஞருமான அலெக்ஸ் சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க