வெளியிடப்பட்ட நேரம்: 21:49 (10/08/2017)

கடைசி தொடர்பு:08:43 (11/08/2017)

ஆளுநரை சந்திக்க தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் முடிவு!

இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி, 'கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நியமனம் சட்டவிதிகள்படி செல்லாது. அவர் நியமித்த கட்சியின் புது நிர்வாகிகளின் பதவிகளும் செல்லாது' என்று அதிரடியாக அறிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், தஞ்சாவூரில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டவிதிகளின்படிதான் தன்னை பொதுச்செயலாளர் சசிகலா நியமித்ததாக சொன்னார். இந்த நிலையில், அண்மையில் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பிய ஒரு கேள்விக்கு தேர்தல் கமிஷன் அளித்த பதில் வைரலாக இன்று மாலை முதல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 'கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்ததை இன்னும் தேர்தல் கமிஷன் அங்கீகரிக்கவில்லை' என்பதுதான் தேர்தல் கமிஷனின் பதில். டெல்லியில் நாளை நடக்கவுள்ள துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளச் செல்லும் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியைச் சந்திக்க உள்ளனர்.

தினகரன்

டெல்லி பி.ஜே.பி. மேலிட அழுத்தம் காரணமாக, அடுத்த சில நாள்களில் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வமும் கைகுலுக்குவார்கள் என்று இருதரப்பினரும் உற்சாகமாகப் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், தினகரன் அணியினர் மட்டும் தனித்துவிடப்படுகின்றனர். அ.தி.மு.க-வில் உள்ள 134 எம்.எல்.ஏ-க்களில் பலரும் தன்னிச்சையாக செயல்பட்டு வருவது  ஒருபுறமிருக்க... தற்போதைய சூழ்நிலையில், எடப்பாடி பழனிசாமியுடன் 104 எம்.எல்.ஏ-க்களும், தினகரனுடன் 40- 45 எம்.எல்.ஏ-க்களும் (18 பேர் உறுதி), ஒ.பன்னீர்செல்வத்துடன் 11 எம்.எல்.ஏ-க்களும் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி, தனது முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டுமானால், அவருக்கு 117 எம்.எல்.ஏ-க்கள் தேவை. அவரிடம் உள்ளவர்கள் ப்ளஸ் ஒ.பன்னீர்செல்வம் அணியினரைச் சேர்த்தால் மேலும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தேவைப்படும். இந்த மூன்று எம்.எல்.ஏ-க்கள் ஊசலாட்டத்தில் எடப்பாடி அரசு உள்ளது. தினகரன் தரப்பில் உள்ள எம்.எல்.ஏ-க்களில் முக்கியமான சிலர் அவசரமாக சென்னையில் கூடி அவசர ஆலோசனை செய்துவருகின்றனர். எடப்பாடி அரசுக்கு அவர்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறலாமா? என்பதுதான் டாபிக். 

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ஒருவர், ''மத்திய அரசும் தேர்தல் கமிஷனும் அவர்களுக்கு மறைமுகமாக ஜால்ரா தட்டாது என்று எதிர்பார்க்கிறோம். இவர்களின் ஒத்துழைப்புடன் எடப்பாடி பழனிசாமியும் ஒ. பன்னீர்செல்வமும் கைகோத்து தினகரனை ஒழிக்க நினைத்தால், ஏமாந்து போவார்கள். எங்கள் ஆதரவில் உள்ள எம்.எல்.ஏ-க்களுடன் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க முடிவு செய்துள்ளோம்" என்கிறார். அவரே தொடர்ந்து சொல்லும்போது, 

"தினகரன் மேலூரில் பொதுக்கூட்டத்துக்குப் போகும்போது சென்னைத் தலைமைக்கழகத்தில் சசிகலாவின் பேனர் கட்ட இருக்கிறோம். இதற்கு இடைஞ்சல் வந்தால், சும்மா வேடிக்கை பார்க்கமாட்டோம். தேர்தல் கமிஷன் தரப்பில் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது செல்லாது என்று சொல்ல வாய்ப்பே இல்லை. ஏதோ ஆர்.டி.ஐ-யில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குத் தேர்தல் கமிஷன் அளித்த பதிலின் நடுவில் உள்ள சில வரிகளை மட்டும் உருவி எடப்பாடி அணியினருக்கு ஆதரவான வார்த்தைகளைப் போட்டு அதை மீடியாக்களில் பரப்பி வருகிறார்கள். தேர்தல் கமிஷனில் முழுப் பதிலை படித்தால், உண்மையைப் புரிந்துகொள்வீர்கள். இரட்டை இலைச் சின்னம் யாருக்கு என்பதைத்தான் தேர்தல் கமிஷன் சொல்ல முடியும். கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரத்தில் தேர்தல் கமிஷன் தலையிடவே முடியாது. கருத்தும் தெரிவிக்க முடியாது. எங்களின் உட்கட்சி பிரச்னையில் தலையிட தேர்தல் கமிஷனுக்கு உரிமை இல்லை. பொதுச்செயலாளர் பதவியில் உள்ள சசிகலாதான் என்பதை வலியுறுத்தி கட்சியின் சட்ட விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் தவிர மற்ற பதவிகளில் பிரச்னை வரும்போது, இது தொடர்பாக கருத்துச் சொல்ல நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. பொறுத்திருந்து பாருங்கள்.. அடுத்த சில நாள்களில் பல அரசியல் நிகழ்வுகள் கட்சியில் நடக்க உள்ளது" என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க