வெளியிடப்பட்ட நேரம்: 21:31 (10/08/2017)

கடைசி தொடர்பு:08:39 (11/08/2017)

எடப்பாடி பழனிசாமி அணியினரின் தீர்மானம்... குழப்பத்தில் திவாகரன்!

அ.தி.மு.க-வில் நடந்து வரும் உட்கட்சி குழப்பங்களுக்கு இடையில் சசிகலாவின் தம்பி திவாகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

திவாகரன்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டையில் இருக்கும் அ.தி.மு.க-வின் தலைமையகத்தில் நடைபெற்ற அ.தி.மு.க அம்மா அணியின் கூட்டத்தில், 'தினகரனின் அறிவிப்புகள் கட்சியை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது' என்று அதிரடியாக அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், 'கட்சியின் பெயரைத் தவறாகக் குறிப்பிட்டுள்ளதால் முதலமைச்சர் பதவியை எடப்பாடி பழனிசாமி இழக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

இப்படிப்பட்ட சூழலில் செய்தியாளர்களைச் சந்தித்த திவாகரன், 'தினகரன், துணைப் பொதுச்செயலாளராக செயல்பட முடியாது என்ற தீர்மானம் தொண்டர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. நாங்களே குழம்பிப்போய் இருப்பதால் தொண்டர்களும் குழம்பிப்போய்தான் இருப்பார்கள். ஓராண்டாகக் கட்சி நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை. என்னதான் பிரச்னை என்பதை நானே முதல்வரிடம் கேட்பேன். அ.தி.மு.க-வில் இருப்பவர்கள் எல்லாருமே எங்கள் பங்காளிதான். இரு அணிகளும் பயம் காரணமாக வேண்டுமானலும் இணையலாம். மனபூர்வமாக இணைய வாய்ப்பில்லை. டி.டி.வி.தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டத்தில் தற்போது நிலவி வரும் குழப்பங்களுக்குத் தெளிவு கிடைக்கும். கட்சி நிச்சயமாகக் காப்பாற்றப்படும். ஆட்சி என்பது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைகளில்தான் இருக்கிறது' என்று பேசியுள்ளார்.