தோண்டத் தோண்ட கிடைக்கும் அரிய பொக்கிஷங்கள்... கீழடியை மிஞ்சும் அழகன்குளம் அகழாய்வு?

தோண்டத் தோண்ட சங்க கால அரிய பொக்கிஷங்கள் கிடைப்பதால், கீழடியை மிஞ்சும் வகையில் அழகன்குளம் அகழாய்வு இருக்கும் என அதன் இயக்குநர்கள் கூறியுள்ளனர்.

தமிழக அரசு தொல்லியல் துறையின் மூலம் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சி செய்து  மண்ணில் புதைந்துள்ள வரலாறுகளை வெளியுலகிற்கு ஆவணப்படுத்தி வருகிறது. இதன் மூலம் பண்டைய காலத்தில் வாழ்ந்த மக்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வணிகம், எழுத்தறிவு, வாழ்க்கைமுறை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான வாழ்வியல் கூறுகள் தெரிய வருகிறது.

அழகன்குளம் அகழாய்வு பணிகள்  

அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட  அழகன்குளம் கிராமம் சங்ககாலத்தில் புகழ் பெற்ற வணிகநகரமாக விளங்கியது  என்பது, இப்பகுதியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வின்போது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அழகன்குளம் கிராமத்தில் 1986-87-ம் ஆண்டில் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர் 1990-91, 1993-94, 1995-96, 1996-97, 1997-98 மற்றும் 2014-15  ஆகிய வருடங்களில் 7 கட்டங்களாக அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

அழகன்குளம் அகழாய்வு பணிகள்

இந்த அகழாய்வுகளின் மூலம்  பண்டைய காலத்தில் இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் பயன்படுத்திய ஆபரணப் பொருட்களான சங்கு வளையல்கள், அரிய கல்மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், கண்ணாடி மணிகள், விளையாட்டு பொருட்கள், இரும்பிலான கருவிகள், மத்திய தரைக்கடல் பகுதி நாடுகளோடு கொண்டிருந்த வணிகத் தொடர்பை வெளிப்படுத்தும் அரிய வகை மண்பாண்டங்கள், நாணயங்கள், தமிழ் பிராமி எழுத்து பொறித்த மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன.

அழகன்குளம் அகழாய்வு பணிகள்

 

இதனைத் தொடர்ந்து சிறப்பு வாய்ந்த இந்தப் பகுதியின் பழந்தன்மையை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் 2016-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா ''ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் பகுதியில் விரிவான அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்" என 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவித்தார். 

அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த மே 9-ல் 55 லட்சம் ரூபாய் செலவில் அரசுப் பள்ளி பகுதியில் அகழாய்வுப் பணியை தொடங்கினர். தற்போது பள்ளி அருகே தனியார் பட்டா நிலங்களில் அகழாய்வுப் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அதைத் தொடர்ந்து தொல்லியல் துறை இரண்டாம் கட்ட ஆய்வுப் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. 4 மாத காலத்தில் இந்த அகழாய்வுப் பணிகளை செய்து முடிக்க திட்டமிடப்பட்டது. அதன்படி இந்த மாதம் இதன் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில், அவ்வப்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் சிறிது இடையூறு ஏற்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணி குறித்து அழகன்குளம் மைய இயக்குனர் பாஸ்கரன் கூறியபோது ''இங்கு அகழாய்வு செய்ததில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் பயன்படுத்திய பல அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வு மையத்தை காட்டிலும், பல மடங்கு பொருட்கள் அழகன்குளம் அகழாய்வில் கிடைத்துள்ளன. சுடுமண் சிற்பம், சங்குகள், யானை தந்தங்களால் ஆன அணிகலன்கள், இரும்பிலான பொருட்கள், மண்பாண்டங்கள் போன்ற அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இவை முடிந்த பின் இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பழந்தமிழர்களின் பொருட்கள் ஒரு சிலவற்றை காட்சிப்படுத்துவோம். ஒரு மாதத்துக்குப் பின் அனைத்து பொருட்களும் ஆவணப்படுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்படும்"என்றார்.

அழகன்குளம் அகழாய்வு மைய பொறுப்பாளர் சக்திவேல் ''அகழாய்வு பணியின்போது எவ்வித இடையூறு இல்லாமல் இருந்ததால், எங்களால் பொருட்களை பெரும் சேதம் இன்றி சேகரிக்க முடிந்தது. குறிப்பாக கழுத்தில் அணியும் மணி, கடுகை விட சிறியதாக இருக்கும். அதில் தலைமுடி கூட உள்ளே செல்ல முடியாத அளவுக்கு ஓட்டை போட்டு, நுாலால் மணிகளை கோர்த்து பண்டைய தமிழர்கள் அணிந்துள்ளனர். இயற்கையை கடவுளாக வணங்கியதால், சிலைகள் எதுவும் இல்லை. சிறிய அளவிலான சுடுமண் சிற்பங்கள் மட்டுமே கிடைத்துள்ளன '' என்றார்.

 

 

கடலாலும் காலத்தாலும் அழிக்கப்பட்ட தமிழ் இனத்தின் கலை, கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் தோண்ட தோண்ட ஆதாரங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் உலகில் முதலில் நாகரீகம் தோன்றிய இடமாக தமிழகம் இடம் பெற்று விடுமோ என்ற அச்சத்தால் பல அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படாமலும், அரைகுறையாகவும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்திய அகழாய்வு பணியின் முன்னோடியாக கூறப்படுவது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணிகள். அங்கு கண்டெடுக்கப்பட்ட வரலாறுகளின் காலத்தை பற்றி, அறிக்கை கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அடுத்ததாக கீழடியை போராடித்தான் தோண்ட வைக்க வேண்டியுள்ளது. இப்போது அழகன்குளம் அகழாய்வு. இதன் முடிவுகளாவது முழுமையாக வெளியாகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!