Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரவு நேரக் காவலாளிகளின் ஓர் இரவு எப்படி இருக்கும் தெரியுமா?

எளிய மனிதர்கள் சூழ் சமூகம் இது. நாம் அனைவருமே எளிய மனிதர்கள்தான். ஆனால், எப்போது கார்ப்பரேட் கலாசாரம் காலூன்றியதோ அப்போதிலிருந்து பயோ மெட்ரிக் வாழ்க்கை முறைக்கு நாம் மாறிவிட்டோம். இதனால் எளிய மனிதர்களையோ, எளிய மனிதர்களின் பிரச்னைகள்குறித்தோ அறிய நமக்கு நேரமில்லை. எத்தனை புதிய இந்தியாக்கள் பிறந்தாலும், சிலரது வாழ்க்கை முறை மட்டும் மாறவே மாறாது.

காவலாளிகள்


அப்படிப்பட்டவர்கள்தான் காவலாளிகள். தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், மருத்துவமனைகள், ஐ.டி கம்பெனிகள், வங்கிகள், ஏ.டி.எம்-களில் இரவு, பகல் பாராமல் 24*7 பணி செய்யும் காவலாளிகளைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. பரபரப்பான வாழ்க்கை முறையில் பகலிலேயே அவர்களது பிரச்னைகுறித்து நாம் யோசிப்பதில்லை. அப்படி இருக்கும்போது, இரவு நேரக் காவலாளிகளின் வாழ்க்கை முறை குறித்து நாம் தெரிந்துவைத்திருக்க வாய்ப்பில்லை. அன்றாட வாழ்க்கையில், நாம் அனைவருமே தினசரி அவர்களைக் கடந்ததுதான் செல்கிறோம். எனவே, அடுத்த சில நிமிடங்கள் அவர்களின் வாழ்க்கைக்குச் செல்வோம் வாங்க...


நேரம்: நள்ளிரவு 1 மணி


இடம்: அண்ணா சாலை


அந்த நள்ளிரவிலும் கண்ணில் சற்றும் தூக்கமின்றி அமர்ந்திருந்த ஏ.டி.எம் மையத்தின் காவலாளி ஒருவரிடம் பேச்சுக்கொடுத்தோம், "என் பேரு மணி. நான் 11 வருஷமா இந்த வேலைல இருக்கேன். முன் எல்லாம் டைமிங்கே இருக்காது. இப்போதான் டைமிங் முறையே வந்துருக்கு. எனக்கு 8 மணி நேரம் ஷிஃப்ட். எங்களுக்கு வேலை கொடுத்துள்ள நிறுவனத்துல இருந்து, போலீஸ்காரங்க இப்படி நைட் ரெண்டு, மூணு தடவைக்கு மேல் ரவுண்ட்ஸ் வருவாங்க. சற்று கண் அசந்தாலும் வேலைய விட்டு தூக்கிருவாங்க. 

மணி


மொத்தம் மூணு விதமான ஷிஃப்ட் இருக்கு. ஒருத்தர் வரமுடியாமப் போனாலும், அவங்க ஷிஃப்டை நாமதான் பார்க்கணும். வருஷத்துல எந்த நாளும் எங்களுக்கு லீவே கிடையாது. அப்படி லீவ் போட்டா, அன்னிக்கு சம்பளம் கட். தீபாவளி, பொங்கல் என்று எந்தப் பண்டிகைனாலும் வேலைக்கு விடுமுறை இல்லை. எவ்ளோ வருஷம் வேலை பார்த்தாலும் மாசத்துக்கு 10,000-க்கு மேல சம்பாதிக்க முடியாது.
இப்போ, வட நாட்டுக்காரங்க வேற அதிகமா வந்துட்டாங்க. ஒரு ரயிலில் 10 பேராவது வந்துடுறாங்க. அவங்களுக்கு 8,000 சம்பளமே பெரிய விஷயம். குடும்பம், குட்டி இல்லததால வேலைல நிறைய அட்ஜஸ்ட் பண்ணிப்பாங்க. துரத்தினாலும் போக மாட்டாங்க. இதனால, நம்ம ஆளுங்களுக்கும் சம்பளம் பெருசா கிடைப்பதில்லை" என்றார் வேதனையுடன்.


நேரம்: நள்ளிரவு 2 மணி


இடம்: அதே அண்ணா சாலை


கார் ஷோரூம் ஒன்றின் முன்பு அமர்திருந்த ஒரு வயதான காவலாளியிடம் பேசினோம், "என் பேரு ராமலிங்கம். திருப்போரூர்தான் சொந்த ஊரு. 54 வயசாகுது. 30 வருஷமா இதே வேலைதான். எத்தனையோ கம்பெனி மாறிட்டேன். முக்காவாசி நிறுவனங்கள் இதுல சரியா சம்பளம் கொடுப்பதே பெரிய விஷயம். அதனால சம்பளம் கொடுக்காட்டி உடனே கம்பெனி மாறிடுவேன். இப்போ எனக்கு 12 மணி நேரம் வேலை. பகல் ஷிஃப்ட்ல ஆளுங்க வராட்டி 24 மணி நேரமும் இங்கதான். சில நேரத்துல தொடர்ந்து ரெண்டு, மூணு நாள்கூட இருக்க வேண்டியதுவரும். 

ராமலிங்கம்


எங்க கம்பெனி ஃபீல்டு ஆபீஸர் ரவுண்ட்ஸ் வரும்போது, கண்ண லைட்டா மூடினாக்கூட 'என்னயா தூங்கற'னு கேட்பாங்க. இதுல சிலர் குடிச்சிட்டு செய்யற ரவுசுகளைத் தாங்கவே முடியாது. குடிச்சிட்டு நம்மளை கல் எடுத்து அடிக்க வருவாங்க. இந்த கார்களுக்கு ஏதாவதுனா நாமதான் பொறுப்பு. யாராவது காரை கல் எடுத்து அடிச்சிட்டா, அவங்களை ஓடிப் போயி புடிக்கணும். இல்லாட்டி நம்ம கதை அவ்வளவுதான். எந்த நிமிஷம் வேணாலும் வேலைய விட்டுத் தூக்கிருவாங்க.


ஒரு தடவை, வேலை செய்யற இடத்துல எனக்கு கால்ல அடிபட்டுடுச்சு. ஆனாலும், தொடர்ந்து 48 மணி நேரம் வேலைபார்த்தேன். உடம்புக்கு என்ன பிரச்னை வந்தாலும் வேலை செஞ்சுதான் ஆகணும். குடும்பத்தோட நேரம் செலவு பண்ண முடியாது. இப்ப 9,000 சம்பளம். எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களை நல்லா முன்னுக்குக் கொண்டுவரணும்" அவ்ளோதான்பா என்று முடித்தார்.


நேரம்: நள்ளிரவு 3 மணி


இடம்: நந்தனம் அருகே


சேரில் அமர்ந்தபடி நெருப்பு மூட்டி கொசுக்களை விரட்டிக்கொண்டிருந்த காவலாளி ஒருவரிடம் பேசினோம், "என் பேரு ஃபெரோஸ் அலி. நான் ஆர்மில இருந்து ரிட்டயர் ஆனவன். எட்டு மாசமாதான் இந்த வேலை. வீட்ல சும்மா இருக்க முடியல தம்பி, அதான். செக்யூரிட்டிங்களுக்கு எவ்ளோ பிரச்னை இருக்கு. போதைல அடிக்க வருவாங்க. சுத்தமா பாதுகாப்பு இல்லை. ஒரு இன்சூரன்ஸ்கூட இல்லை. செத்துப்போனா அவ்ளோதான். எங்களை வெச்சு நல்லா சம்பாதிக்கறாங்க. ஆனா, எங்களுக்கு மட்டும் நல்ல சம்பளம் கொடுக்க மாட்றாங்க. 9,000 சம்பளத்துக்கு உயிரைப் பணயம் வெச்சு வேலை பார்க்கறோம்.

ஃபெரோஸ்


சாப்பாடு சாப்பிட்டா ஜீரணம் ஆகாது. நைட் ஷிஃப்ட் தொடர்ந்து பார்க்கிறப்ப, மன அழுத்தம் அதிகமாயிடுது. எனக்கு சுகர் இருக்கு தம்பி. ஆனா, இந்த வேலைல சரியான நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாது. என்ன பண்றது... அப்படியே போகுது வாழ்க்கை" என்றார் புன்சிரிப்புடன்.


இப்படி பல பிரச்னைகளுடன் தூங்கும் நம் நகரைத் தூங்காமல் தாலாட்டும் காவலாளிகளைக் கடந்து செல்லும்போது, அவர்கள் வணக்கம் சொன்னால், பதிலுக்கு வணக்கம் சொல்லுங்கள்... ஒரு புன்முறுவலுடன் நகருங்கள்... அவர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது வேறு எதுவும் இல்லை. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement