பினராயி விஜயன் செய்ய மறந்த இரு விஷயங்கள் !

கேரளாவில் விபத்தில் சிக்கியத் தமிழர் முருகனுக்கு சிகிச்சையளிக்க தனியார் மருத்துவமனைகள் மறுத்த காரணத்தினால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முருகனின் உயிரைக் காப்பாற்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜு 7 மணி நேரம் போராடியிருக்கிறார். கொல்லம் நகரில் 5 மருத்துவமனைகள் ராஜுவிடம் அவரின் பின்புலம் பற்றி கேட்டறிந்து, முருகன் ஏழ்மையானவர் என தெரிந்துகொண்டே சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றன. முடிவில் அநியாயமாக முருகன் பலியானார்.

கேரள முதலமைச்சரின் ட்விட்

இரு மாநிலங்களிலும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் நேற்று பகிரங்க மன்னிப்புக் கோரினார். கேரள முதலமைச்சரின் ட்விட்டர் பக்கத்திலும் தமிழிலேயே முதலமைச்சர் பினராயி விஜயன், மன்னிப்பு கேட்டதாக ட்விட் செய்யப்பட்டிருந்தது. சாமான்யர் ஒருவரின் இறப்புக்காக  சட்டமன்றத்தில்  பினராயி விஜயன் மன்னிப்புக் கோரியது அவரின் இமேஜை உயர்த்தியிருக்கிறது. ஆனாலும், பினராயி விஜயன் செய்ய மறந்த காரியங்களும் உண்டு. 

முதலாவது முருகனின் குடும்பத்தினரின் ஏழ்மை நிலையைக் கருத்தில் கொண்டு உடனடி நிவாரண நிதி அறிவித்திருக்க வேண்டும். ஏனென்றால், முருகன் மோட்டார் சைக்கிளில் சென்றபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதிதான் விபத்தில் சிக்கியிருக்கிறார். எதிரில் வந்தவர்களும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருக்கின்றனர். அதனால், நீதிமன்றம் வழியாக முருகனின் குடும்பத்துக்கு இழப்பீடு கிடைக்க வாய்ப்பு இல்லை. முருகனுக்கு இரு குழந்தைகள்.

பலியான முருகனின் மனைவி

Photo Courtesy: Mathrubhumi

திருவனந்தபுரத்தில் இருந்து சொந்த ஊரான நெல்லை மாவட்டத்தில் உள்ள சமுகரெங்கபுரத்துக்கு முருகனின் உடலைக் கொண்டு செல்லவே பணம் இல்லாமல் அவரின் மனைவி தவித்ததாக மாத்ருபூமி நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. முருகனின் உடலைக் கொண்டு செல்ல பினராயி விஜயன் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சிதான் ரூ.10 ஆயிரம் பணம் வழங்கியிருக்கிறது. இந்தத் தகவல்கள் கேரள முதலமைச்சரின் காதுக்கு எட்டாமல் இருந்திருக்காது. குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டாவது, கேரள முதலமைச்சர் நிதியுதவி அறிவித்திருக்க வேண்டும். 

இரண்டாவதாக முருகனைக் காப்பாற்ற போராடிய ஆம்புலன்ஸ் ஒட்டுநர் ராஜுவுக்கும் தன் வருத்தத்தின்போது, பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஏனென்றால் முருகனைக் காப்பாற்ற போராடிய ராஜு, முடிவில் அவர் இறந்ததும் மனம் பொறுக்காது போலீஸில் புகார் அளித்தவர். ஏதோ ஒரு மண்ணைச் சேர்ந்தவர்தானே நமக்கு என்னவென்று ராஜு போயிருந்தால் இந்த உண்மை வெளியே தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. 

இந்த இரு விஷயங்களையும் பினராயி விஜயன் செய்திருந்தால் அவரின் 'பகிரங்க மன்னிப்பு 'விலை மதிப்பற்றதாகியிருக்கும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!