வெளியிடப்பட்ட நேரம்: 12:29 (11/08/2017)

கடைசி தொடர்பு:12:29 (11/08/2017)

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது! மத்திய அரசு திட்டவட்டம்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுவிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

ராஜீவ் கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தங்களை விடுவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2012ல் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வருவதாக அவர்கள் கூறியிருந்தனர். ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் 14 ஆண்டுகளிலேயே விடுதலை செய்யப்படுவதால் தங்களை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஏ.செல்வம் மற்றும் பொன்.கலையரசன் ஆகியோர் முன்னிலையில் கடந்த புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பில் இன்று பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரும் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதுதான் என்று கூறியுள்ள மத்திய அரசு, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.