வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (11/08/2017)

கடைசி தொடர்பு:13:13 (11/08/2017)

நீட் தேர்வு உள் ஒதுக்கீடு விவகாரம் - தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்!

நீட் தேர்வு குறித்த குழப்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தமிழகத்தில் நீட் தேர்வால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு பெற்றனர். மற்ற மாணவர்களின் மருத்துவ கனவு நீட் தேர்வினால் கலையும் அபாயம் ஏற்பட்டது.

supreme court


இதனால், தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85% இடஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மீதம் இருக்கும் 15% இடங்களும் ஒதுக்கப்படும் என்ற உள்ஒதுக்கீடு அரசாணையை அறிவித்தது. இந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும் என்று சி.பி.எஸ்.இ மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. 

தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தின் அரசாணை ரத்து தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இன்று அவசர வழக்காக இந்த மனு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. "தமிழகத்தில், 85% உள்ஒதுக்கீட்டை ரத்து செய்ததைத் தடை செய்ய முடியாது. சி.பி.எஸ்.இ , மாநில பாடத்திட்டம் என மாணவர்களிடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது" என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.   நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழக முதல்வர் இன்று பிரதமரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.