அ.தி.மு.க., இனி இவர்கள் கையில்..! தினகரன் பதவி பறிப்புப் பின்னணி #VikatanExclusive | ADMK crisis : Reason behind TTV.Dinakaran eviction

வெளியிடப்பட்ட நேரம்: 14:01 (11/08/2017)

கடைசி தொடர்பு:15:04 (11/08/2017)

அ.தி.மு.க., இனி இவர்கள் கையில்..! தினகரன் பதவி பறிப்புப் பின்னணி #VikatanExclusive

தினகரன்


ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக, செயல் தலைவர் பதவியை அ.தி.மு.க-வில் ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கட்சியை வழிநடத்த வழிகாட்டுதல் குழுவும் அமைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிரிந்த அ.தி.மு.க அணிகள் விரைவில் ஒன்றிணைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினரின் கோரிக்கையை நிறைவேற்ற, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சம்மதம் தெரிவித்தார். துணைப் பொதுச்செயலாளர் தினகரனின் நியமனம், சட்டவிரோதமானது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில், துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டெல்லியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை 5.20 மணிக்கு முதல்வர் டெல்லிக்குப் புறப்பட்டார். அடுத்து, மாலை 6.20 மணிக்கு டெல்லி புறப்பட்டார், ஓ.பன்னீர்செல்வம்.

முன்னதாக, தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அந்தக்  கூட்டத்தில், அணிகள் இணைப்புக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது. அதை, பன்னீர்செல்வம் அணியினர் மறைமுகமாக வெளிப்படுத்தினர். டெல்லியில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும், ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைவது தொடர்பாக இறுதிக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து நம்மிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு அமைச்சர்கள், “ஓ.பன்னீர்செல்வம் அணியினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், அந்த அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுக்க முடிவு எடுத்துள்ளோம். ஓ.பன்னீர்செல்வம் அணியினர், சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதையும் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம். இதனால், அணிகள் இணைவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. மேலும், ஜெயலலிதா வகித்த பொதுச் செயலாளர் பதவியை யாருக்கும் கொடுக்க வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். பொதுச் செயலாளர் பதவிக்குப் பதிலாக, செயல் தலைவர் பதவி ஏற்படுத்தப்படும். அதுவரை வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் துணைத் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நியமிக்கப்படுவார்கள். மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியிலும், தலா ஏழு பேர் என 14 பேர் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற உள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்" என்றனர்.

 ஓ.பன்னீர்செல்வம்

ஓ.பன்னீர்செல்வம் அணியில் பேசியவர்கள், “எங்களது தர்மயுத்தத்துக்கு முழுமையான வெற்றி கிடைக்கவில்லை. தினகரனை மட்டுமே கட்சியிலிருந்து நீக்குவதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர்குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. அதை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் தெளிவுப்படுத்த வேண்டும். பிறகு, அணிகள் இணைப்புகுறித்து முடிவெடுக்கப்படும். டெல்லியில், துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவுக்காகத்தான் ஓ.பன்னீர்செல்வம் சென்றுள்ளார். அணிகள் இணைப்புகுறித்து அங்கு பேச வாய்ப்பில்லை. தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டாலும், முழுமையாக சசிகலா குடும்பத்தினரை நீக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம்குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்ற வேண்டும். அதன்பிறகு, இரண்டு அணிகளும் இணையும். மேலும், சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமனம் செல்லும் என்று தாக்கல்செய்யப்பட்ட அஃபிடவிட்டை எடப்பாடி பழனிசாமி அணியினர் திரும்பப் பெறவேண்டும். இதெல்லாம் நடந்தால், இரண்டு அணிகளும் இணைவதோடு இரட்டை இலைச் சின்னமும் கிடைத்துவிடும்' என்றனர்.

 தினகரன் தரப்பில் பேசியவர்கள், "பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் அறிவித்துள்ளனர். யாரையோ திருப்திப்படுத்த இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கட்சி விதிப்படி தினகரனை நீக்கும் அதிகாரம் சசிகலாவுக்கு மட்டும்தான் உள்ளது. துணைப் பொதுச்செயலாளர் தினகரன் நியமித்த நிர்வாகிகள் பட்டியல் செல்லும். சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் செல்வாக்கு இருப்பதை மேலூர் கூட்டத்தில் நிரூபிக்கப்படும். தினகரனை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்தாலும், தொண்டர்கள் மனதிலிருந்து நீக்க முடியாது. கட்சிக்கும் ஆட்சிக்கும் சசிகலா குடும்பத்தினரால் என்றுமே சிக்கல் ஏற்படாது. அதற்காகத்தான் இதுவரை தினகரன் அமைதியாக இருந்துவந்தார். இனிமேலும் அப்படியேதான் இருப்பார்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்