பாதுகாப்பற்ற நிலையில் பாலூட்டும் அறைகள்... பொதுவெளியில் தவிக்கும் பெண்கள்..! | Feeding centres are highly unsafe, Mothers in trouble at public places

வெளியிடப்பட்ட நேரம்: 13:41 (11/08/2017)

கடைசி தொடர்பு:13:41 (11/08/2017)

பாதுகாப்பற்ற நிலையில் பாலூட்டும் அறைகள்... பொதுவெளியில் தவிக்கும் பெண்கள்..!

பாலூட்டும்

தாய்ப்பால் கொடுப்பதில் பெண்களுக்கு உள்ள சங்கடங்களைத் தவிர்ப்பதற்காக தமிழகத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தமிழக அளவில் 352 பாலூட்டும் அறைகளை பேருந்து நிலையங்களில் தொடங்கி வைத்தார். போதிய இடவசதி, வசதியாக அமர்ந்து பாலூட்டும் இறுக்கை, காற்றாடி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, பாதுகாவலர் என சகல வசதிகளோடும் இந்த பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன. இது பெண்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழக அரசின் இந்த புதிய முயற்சியை மத்திய ரயில்வே நிர்வாகமும் பின்பற்றியது. 

ரயில் நிலையங்களில் தாய்ப்பால் கொடுப்பதற்கான அறைகள் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக பேரூராட்சி மற்றும் நகராட்சிகளிலும் பாலூட்டும் அறைகளைத் திறக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கனவு. பேருந்து நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள இதுபோன்ற அறைகள் மூடப்பட்டுள்ளது, சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

உலக சுகாதார நிறுவனம் குழந்தைகள் அனைவருக்கும் தாய்ப்பால் கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு பல்வேறு பரிந்துரைகளை உறுப்பு நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இந்திய தாய்ப்பால் மேம்பாட்டு அமைப்பு தாய்ப்பால் தர வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான ஆய்வுகளையும் செய்கிறது. குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கவே பேருந்துநிலையத்தில் பாலூட்டும் அறைகள் திறக்கப்பட்டன. 

இதன் செயல்பாடுகள் குறித்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஷீலா வின்சென்ட் கூறுகையில், ‘‘இத்திட்டம் துவங்கிய புதிதில் சேலம் மாவட்ட புதிய பேருந்து நிலைய பாலூட்டும் அறையில் பெண் பாதுகாவலர் சீருடையில் இருந்தார். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர வேறு யாரும் அந்த அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. கடந்த 9 மாதங்களாக நிலைமை தலைகீழாகிவிட்டது. பெண் பாதுகாவலர் இல்லை. பாலூட்டும் அறையில் போதிய பாதுகாப்பின்றி காணப்படுகிறது. ஆண்கள் அந்த அறையை தற்பொழுது ஆக்கிரமித்துள்ளனர்,’’ என்றார். 
selvagomathi பாலூட்டும்மதுரையைச் சேர்ந்த மனித உரிமை செயல்பாட்டாளர் செல்வகோமதி, ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மதுரையின் முக்கிய பொது இடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு எவ்விதம் உள்ளது என்று ஆய்வுகள் நடத்தினோம். அதிகாலை மூன்று மணிக்கு காய்கறி மார்க்கெட் தொடங்கும். கிராமப்புற பெண்கள் இரவு பத்து மணிக்கே வந்து பேருந்து நிலையத்தில் படுத்து உறங்குவது வழக்கம். பேருந்து நிலையத்தில் பாதுகாப்புக்காக இருக்கும் அறையில் ஆண்கள்தான் படுத்திருப்பார்கள். பெண்களுக்கு பாதுகாவலர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கான கழிப்பிடமும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருந்தது. இந்த சூழலில் பேருந்து நிலையங்களில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்து வந்தனர். 

தாய்ப்பால் கொடுக்கும் அறைகள் பெண்களுக்கு வரப்பிரசாதமே. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தாய்மாருக்கான பாலூட்டும் அறை போதிய வசதிகளுடன் பராமரிப்பில் உள்ளது. இங்கு வரும் பெண்கள் எந்தவித சிரமமும் இன்றி தாய்ப்பால் கொடுப்பதைப் பார்க்க முடிகிறது. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பாலூட்டும் அறை பராமரிப்பின்றி உள்ளது. ஒரு சில பேருந்து நிலையங்களில் பாலூட்டும் அறைகள் பூட்டப்பட்டிருப்பதாக புகார்கள் உள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு பிரச்னைகளை சரிசெய்ய வேண்டும்,’’ என்கிறார் செல்வகோமதி.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்