வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (11/08/2017)

கடைசி தொடர்பு:15:20 (11/08/2017)

தினகரனுக்கு எதிராக டெல்லியில் கொந்தளித்த முதல்வர் பழனிசாமி!

"420 எனக் கூறியது தினகரனுக்குத்தான் பொருந்தும்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்தினேன். மேலும், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் கிடைக்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், தேவைப்பட்டால் சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதுகுறித்து கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த முதல்வர் பழனிசாமி, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால், அரசு வெற்றிபெறும் என்றும், ஏற்கெனவே பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்று அரசு வெற்றிபெறும் என்றும் கூறினார்.

'உங்களை தினகரன் 420 என்று கூறியிருக்கிறாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், 'எங்களை 420 என தினகரன் சொல்கிறார். அது அவருக்குத்தான் பொருந்தும்' என்று கடுமையாக விமர்சித்தார்.

பன்னீர்செல்வம் அணியுடன் இணைப்புகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு, ''பன்னீர்செல்வம் அணியுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை; 'இணையும்' என்ற நம்பிக்கை உள்ளது'' என்று முதல்வர் பதிலளித்தார்.