Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அ.தி.மு.க குறித்த கேள்விக்கு கருணாநிதி ஸ்டைலில் பதில் சொன்ன வைகோ!

அனைத்துக்கும் கருத்துச் சொல்லும் வைகோ, அ.தி.மு.க வில் நடக்கும் உட்கட்சி பூசல்கள் குறித்து கேட்டபோது, 'நோ கமென்ட்ஸ்' எனக் கூறியுள்ளார்.

vaiko

பரபரப்பான அரசியல் சூழலில், ம.தி.முக பொதுச்செயலாளர் வைகோ, இன்றும் நாளையும் தொடர்ச்சியாக திருச்சியில் மகளிர் அணி, மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்துகிறார். அதன்படி இன்று காலை ம.தி.மு.க மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் ரொகையா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகாதேவி கலந்துகொண்டனர். இதற்காகத் தமிழகம் முழுவதுமிருந்து மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள், ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

vaiko stage

கூட்டத்தில் பேசிய வைகோ,

“திராவிட இயக்கம் சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. நீட் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை மத்திய அரசு நசுக்குகிறது. உச்சநீதிமன்றம் நீட் தேர்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.சி பாடப்பிரிவுதான் எடுத்துக்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளது. இது சமூக நீதியை சாகடித்துள்ளது. இதற்காக பொதுமக்கள் எல்லோரும் சேர்ந்து போராட வேண்டும். ஆனால் மக்களும் மாணவர்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே தமிழகம்தான் மருத்துவத்துறையில் முதலிடத்தில் சிறந்துவிளங்குகிறது. வட இந்தியத் தலைவர்கள் ஜோதிபாசு உள்ளிட்டோர் தமிழகம் வந்து சிகிச்சை எடுத்துக்கொண்டு போனார்கள். இவை அனைத்தும் இந்த நீட் தேர்வால் சிதைந்து போகும். தமிழகத்தின் ஏழை மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல், பணக்காரர்களும், வெளிநாட்டினரும் பயன்பெருவதற்கே இது வழிவகுக்கும். இதனால் மத்திய அரசு நீட் தேர்வு விசயத்தில் பின்வாங்காது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக இளைஞர்கள் போராடியதைப் போலவே நீட் தேர்வுக்கு எதிராகவும் போராட வேண்டும். 

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி ஆதரவு வேட்பாளர்களை அ.தி.மு.க ஆதரித்துள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர்மீது பல வழக்குகள் கத்தி போல் தொங்கிக் கொண்டிருந்தாலும், அவர் பி.ஜே.பி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளித்திருக்கமாட்டார். முல்லைப்பெரியாறு, காவிரி உள்ளிட்ட தமிழகத்தின் வாழ்வாதார பிரச்னைகளில் தமிழகத்துக்குத் துரோகம் செய்த மத்திய அரசை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கண்மூடித்தனமாகப் பின்பற்றும் அரசாக உள்ளது. நீட் தேர்வு விசயத்தைத் தொடர்ந்து இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்டதை செயல்படுத்த மோடி தீவிரமாகச் செயல்படுவார். பகவத் கீதையை மட்டும் அப்துல்கலாம் சமாதியில் வைத்தது அராஜகம். மீத்தேன் ஹட்ரோ கார்பன் ஆகியவற்றால் டெல்டாவை பாலைவனமாக்க மத்திய அரசு முயல்கிறது. மது ஒழிப்புக்காக எனது தாய் மாரியம்மாள் கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடினார். இன்று தமிழகம் முழுவதும் அதன் தொடர்ச்சியாகத்தான் பெண்கள், டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான போராட்டங்களில் களமிறங்கினர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. வரும் செப்டம்பர் 15 தஞ்சையில் அண்ணா பிறந்தநாள் கூட்டம் நடத்த உள்ளோம். இதைத் திறந்தவெளி மாநாடாக நடத்த நினைத்தோம். ஆனால் பந்தல்போட வசதியில்லாததால் அரங்க மாநாடாக நடத்துகிறோம். அதிக செலவு செய்து வாகனங்கள் பிடித்து, மாவட்டத்துக்கு இத்தனை வண்டிகள் வரவேண்டும் என்று கட்டாயமில்லை. உங்களால் முடிந்தால் வாருங்கள்” என முடித்தார்.

இறுதியாக பத்திரிகையாளர்கள், வைகோவிடம் அ.தி.மு.கவில் நடக்கும் உட்கட்சி பூசல்கள் குறித்துக் கேட்டபோது, ’நோ கமென்ட்ஸ்’  எனக் கூறியவர், ’அ.தி.மு.கவில் நடக்கும் பிரச்னை இன்னொரு கட்சியின் பிரச்னை, அதில் நான் கருத்துச் சொல்ல விருப்பமில்லை’ என்றார். பொதுவாக திமுக தலைவர் கருணாநிதி, செய்தியாளர்கள் தன்னிடம் சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்டால் ’நோ கமென்ட்ஸ்’ என்று பதிலளிப்பது வழக்கம். கருணாநிதி ஸ்டைலில் இன்று வைகோ ’நோ கமென்ட்ஸ்’ என்று பதிலளித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement