வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (11/08/2017)

கடைசி தொடர்பு:16:02 (11/08/2017)

டெங்கு பாதிப்பில் காரைக்கால்!

காரைக்கால் மருத்துவமனை

புதுவை அரசின் சுகாதாரத் துறை மெத்தனத்தால் காரைக்காலில் வேகமாய்ப் பரவும் டெங்கு காய்ச்சலைத் தடுக்கமுடியாமல் அரசு மருத்துவமனையில் டெங்குவுக்குத் தனி வார்டு அமைத்து சிகிச்சை தரவேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

காரைக்காலை அடுத்த நிரவி நடுக்களம்பேட்டை கிராமத்துக்கு மதுரையிலிருந்து டெங்கு காய்ச்சலோடு வந்த ஒரு நோயாளியைக் கடித்த கொசுக்கள், அவரது உறவினர்களையும் கடித்ததால், டெங்கு வேகமாகப் பரவி பக்கத்து கிராமமான மரைக்காயர் பிள்ளைத்தோட்டத்தில் வசிப்பவர்களையும் தாக்கியது. இரண்டே நாள்களில் 49 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். தற்போது இந்த எண்ணிக்கை மேலும் கூடியிருக்கிறது. இதை உறுதிசெய்த மாவட்ட நல்வாழ்வுத் துறை, இரு பகுதிகளிலும் தீவிர டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. குடியிருப்புகளைச் சுற்றித் தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுததி துண்டுப் பிரசுரங்களையும் வழங்கியும், கூடுதலாக டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ''காரைக்காலில் குப்பைகளை அகற்றும் பணியைத் தனியாரிடம் ஒப்படைத்துள்ளார்கள். அந்தத் தனியார் நிறுவனமோ குப்பைகளை அள்ளும் ஊழியர்களுக்குக் கடந்த ஆறு மாதகாலமாகச் சம்பளம் கொடுக்கவில்லை. எனவே, ஊழியர்கள் பெயரளவுக்கு அன்பளிப்பு தரும் ஹோட்டல்கள், மருத்துவமனைகள் பகுதிகளில் மட்டும் குப்பைகளை அள்ளுகிறார்கள். மற்ற இடங்களில் எல்லாம் குப்பைகள் மேடுகளாய் காட்சிதருகின்றன. சமீபத்தில் பெய்யும் மழை, குப்பைகளிலிருந்து கொசுக்கள் உருவாகக் காரணமாகிவிட்டது. ஒட்டுமொத்தமாகக் கொசுக்களை ஒழிக்கவேண்டியவர்கள், அவற்றை ஒழிக்காமல் டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ள நிரவி, திருமலைராயன்பட்டித்தில் மட்டும் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்பு உணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டெங்கு கொசு மருந்தைத் தீவிரமாக ஒரே நேரத்தில் அடிக்கவேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் டெங்கு காய்ச்சலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்'' என்றார்.

“டெங்கு காய்ச்சலைத் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை போதுமானதாக இல்லை. அரசுப் பொது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளித்து போதுமான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளதை உறுதிசெய்ய வேண்டும். இத்தகைய நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களை வரவழைக்க வேண்டும்'' என்று காரை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தி இருக்கிறது.

இந்நிலையில், புதுவை சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், “டெங்கு காய்ச்சலானது வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் பரவும். ஆனால் இம்முறை முன்பாகவே வந்துள்ளது. புதுவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகளுக்காகத் தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலைத் தடுக்க விழிப்பு உணர்வு அவசியம். குறிப்பாக டெங்கு கொசுக்கள் நன்னீரில்தான் வளரும். அவை உருவாக எட்டு நாள்களே போதுமானது. எனவே, வீடுகளின் அருகே தேவையற்ற முறையில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிலவேம்பு குடிநீர் வழங்குகிறோம். பொதுமக்கள் தொடர்ந்து மூன்று நாள்கள் நிலவேம்பு குடிநீர் குடித்தாலே இதைத் தடுக்க முடியும். இதுதொடர்பாக பள்ளி மாணவர்களிடம் வெள்ளிக்கிழமைதோறும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்