Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இளைஞருக்கு பெண்ணின் கைகள்! ஜிப்மர் மருத்துவமனை சாதனை

விபத்தில் மூளைச் சாவு அடைந்த பெண்ணின் கைகளை இளைஞருக்குப் பொருத்தி இந்திய அளவில் சாதனை படைத்திருக்கின்றது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை .

ஜிப்மர்

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த மேலகுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் ரத்தினாம்பாள். 50 வயதான இவர் கடந்த 1-ம் தேதி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு விக்கிரவாண்டி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவருக்கு மேல் சிகிச்சை தேவைப்பட்டதால் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 2-ம் தேதி அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதை மருத்துவர் குழு உறுதிப்படுத்தியது.

தொடர்ந்து அந்தத் தகவலை ரத்தினாம்பாளின் மகள் சாந்திக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது மருத்துவக்குழு. அப்போது, “என் தாயாரின் உடல் உறுப்புகளை தீ வைத்து எரிப்பதைவிட மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் கொடுப்பதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன்” என்று சொல்லி உறுப்பு தானம் செய்ய ஒப்புக் கொண்டார். அதையடுத்து கைகளை இழந்த 16 வயது இளைஞனுக்கு ரத்தினாம்பாளின் இரண்டு கைகளும் 16 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. அதேபோல அவரது இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் கண்களும் தானமாகப் பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது.

இதுகுறித்துப் பேசிய ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.சி.பரிஜா, “இந்தக் கை மாற்று சிகிச்சை ஜிப்மரில் இதுவே முதல் முறை. இந்தியாவில் இந்த இலக்கை அடைந்த முதல் அரசு மருத்துவமனை  ஜிப்மர்தான். போதிய அளவுக்கு படிப்பு இல்லையென்றாலும் ரத்தினாம்பாளின் உறுப்புகளை அவரது மகள் தானமாகக் கொடுத்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன். இந்த நிகழ்வு அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழும்” என்றார்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement