Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

12 ஆண்டுகளுக்குப்பின் நிரம்பிய ஏரி உடைந்தது! ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வின் கணவரால் விளைந்த விபரீதம்

தத்தமங்கலம் ஏரி

“தமிழக அரசு, நீர்மேலாண்மை நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளாதது ஏன்” என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீர்மேலாண்மை குறித்து விவாதங்கள் இப்படிப் பரவலாக எழுந்துவரும் நிலையில், கடந்த சில நாள்களாக திருச்சி, அரியலூர், பெரம்பலூர் போன்ற பகுதிகளில் பரவலாக பெய்த மழையில் 12 ஆண்டுகளாக நிரம்பாத ஏரி ஒன்று நிரம்பியது. அரசின் முறையான பராமரிப்பு இல்லாததால், அந்த ஏரியின் கரை உடைந்து மொத்த தண்ணீரும் வீணாய்ப் போனதுதான் கொடுமை.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்த தத்தமங்கலம் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான பெரிய ஏரி உள்ளது. 18 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த ஏரி, அப்பகுதியில் நிலவிய வறட்சியின் காரணமாக வறண்டுபோனது. இந்த ஊர், மண்ணச்சநல்லூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் சொந்த ஊர். மேலும், எம்.எல்.ஏ பரமேஸ்வரி முயற்சியால் இத்தொகுதியில் உள்ள புறத்தாக்குடி, இருங்களூர், ஓமந்தூர், தத்தமங்கலம் உள்ளிட்ட ஆறு ஏரிகளில் சிறு நீர்ப்பிடிப்பு ஆதாரங்களான (எம்.ஐ.டி) திட்டத்தின்கீழ் குளங்கள், ஏரிகளை ஆழப்படுத்தி அதன் கரைகளைப் பலப்படுத்தி மதகுகளைச் சீர்ப்படுத்திட, கடந்த 2016 - 17-ம் ஆண்டு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. மேலும் தமிழக அரசின் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்கீழ் செயல்படுத்தப்படும் 'தாய்' திட்டத்தின் கீழும், இந்த ஏரியைப் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் இந்த ஏரியில் பணிகள் தொடங்கின. திருச்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் பெயரில் பரமேஸ்வரியின் கணவர் முருகன்தான் இந்தப் பணியைச் செய்துவந்தார் எனக் கூறப்படுகிறது.

பரமேஸ்வரி எம்.எல்.ஏபொதுவாகத் தாய் திட்டத்தின்கீழ் குளம், ஏரியிலிருந்து மண் வெளியே செல்லக்கூடாதென்பது விதி. ஆனால், எம்.எல்.ஏ-வின் கணவரோ, எந்த அனுமதியும் இல்லாமல் கடந்த சில நாள்களாக இரவோடு இரவாகத் தங்களுடைய செங்கல்சூளைக்கு மண் அள்ளிச் சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 6-ம் தேதி இரவு மண் அள்ளிய பொக்லைன் இயந்திரம், ஐந்து டிப்பர் லாரிகள், ஒரு டிராக்டர் என அனைத்தையும் சிறைபிடித்தனர். ஆனாலும் மண்ணச்சநல்லூர் தாசில்தார் மகாலெட்சுமியும், சிறுகனூர் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தரும் அந்தப் பக்கம் வரவே இல்லை. மேலும், பரமேஸ்வரியின் கணவர் முருகன் அங்குவந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் மக்கள் கலைந்துசெல்லாமல் அங்கேயே இருக்க, வேறு வழியில்லாமல் வட்டாட்சியர் மகாலெட்சுமி, அந்த வாகனங்களை, சிறுகனூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

ஆனால், அந்த வாகனங்களின்மீதும், அதன் உரிமையாளரான எம்.எல்.ஏ கணவர் முருகனின்மீதும் இதுநாள்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், கடந்த சில தினங்களில் பெய்த கனமழையால் அந்த ஏரியில் நீர் நிரம்பியது. ஏரிக்குள் அள்ளிய மண்ணைக்கொண்டு கரையை முறையாகப் பலப்படுத்தாததால்... ஏரியிலிருந்த மதகு மற்றும் கரை உடைந்து மழை நீர் அதிக அளவில் வெளியேறியது. தகவலறிந்த கிராம மக்கள், மணல் மூட்டைகளைக் கொண்டு கரையில் ஏற்பட்ட உடைப்பைச் சரிசெய்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய பொதுமக்கள், ''இப்படி மழைநீர் வீணாவதற்குக் காரணம் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன்தான். அவர்கள் பணம் சம்பாதிக்க ஏரியில் இருந்த மண்ணைச் செங்கல்சூளைக்கு அதிக அளவில் எடுத்துச் சென்றதும், அந்த மண்ணைக் கரையில் கொட்டி ஏரியைச் சரி செய்யாததும்தான் இந்தப் பிரச்னைக்குக் காரணம்'' எனக் குற்றஞ்சாட்டினர்.

 ஏரி

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.ப.சின்னதுரை, “இந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என நம்பி அவர்களுக்கு ஓட்டுப்போட்டால், அவர்களோ, கோடிகளில் சொத்து சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான், தத்தமங்கலம் ஏரி உடைப்பைப் பார்க்க வேண்டும். சொந்த ஊரில் உள்ள ஏரியில் முறைகேடாக மண் அள்ளி, அதில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் எம்.எல்.ஏ குடும்பத்தின்மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்?

சின்னதுரைஇதுவரை காவிரியில் முறையாகத் தண்ணீர் விடவில்லை. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டிய தமிழகத்தின் எம்.பி-க்கள் அனைவரும் இதை மறந்துவிட்டார்கள்.

மழை வந்தாலும் காவிரியில் அள்ளப்படும் மணல் கொள்ளையால் பலனில்லாத சூழல். மணல் கொள்ளைக்கு எதிராகச் சமூக ஆர்வலர்கள் போராடிவருகின்றனர்.

ஆனால், காவிரிக் கரையோர மக்கள் இந்த மணல் கொள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார்கள். காரணம், மணல் கொள்ளையர்கள், அந்தந்த கிராமங்களில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு, பணப் பட்டுவாடா செய்கிறார்கள்.

விபரீதம் அறியாத மக்கள், அவர்களுக்குச் சாதகமாக உள்ளார்கள். இவற்றை எல்லாம் சரி செய்யாவிட்டால், நம் நிலைமை இதைவிட மோசமாகப் போய்... குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்காத நிலை ஏற்படும்” என்றார் கோபமாக..

வேலியே பயிரை மேய்வதை என்ன சொல்ல!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement