வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (11/08/2017)

கடைசி தொடர்பு:19:30 (11/08/2017)

’தண்ணீர் இருந்தும் மடை இல்லை!’ - விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு!

சிவகங்கை அருகே தண்ணிர் இருந்தும் மடை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.


சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை அருகே கௌரிப்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தில் உள்ள கண்மாய் கடந்த மூன்று நாள்களில் பெய்த மழையால்  நீர் நிறைந்து காணப்பட்டுள்ளது. ஆனால், பத்தாண்டுகளுக்குப் பிறகு கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத குறையாக கண்மாயில் மடையில்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் இப்பகுதி மக்கள் வருத்தமடைந்துள்ளார்கள்.

பத்தாண்டுகளாக இம்மாவட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் இல்லை. அதே போல் உள்ளூர் அமைச்சரான பாஸ்கரனிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் 150 ஏக்கரில் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

கௌரிப்பட்டி கிராம மக்களிடம் பேசும் போது...

இக்கிராமத்தில் உள்ள கௌரிக்கண்மாய் 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தக் கண்மாய் பாசனத்தை நம்பி இக்கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயக்குடும்பங்கள் 150 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். கடும் வறட்சியால் கடந்த சில வருடங்களாகக் கண்மாயில் தண்ணீர் இல்லாமல் வறண்டு போனது. மடை பழுது அடைந்தது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகம் உள்ளூர் அமைச்சரான கதர் மற்றும் கிராமத் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரனிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லாமல் போனது.

தற்போது பெய்த மழையால் கண்மாயில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தண்ணீர் இருந்தும் மடை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்து இருக்கிறோம். இருந்த போதிலும் விளைநிலங்கள் எல்லாம் சீமைக்கருவேல மரங்கள் முளைத்து வரப்புகளும் காணாமல் போய்விட்டது. பழுதான மடையைச் சீர்செய்து விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராமப் பொதுமக்கள் கோரிக்கை.  கடந்த 2008ம் ஆண்டு ஜனாதிபதி விருது பெற்றது எங்கள் கிராமம் என்கிறார்கள். தண்ணீர் இருந்தும் மடை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவியாய் தவித்து வருகிறார்கள்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க