ஜெயலலிதா கைரேகை விவகாரம்..! ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போது திருப்பரங்குன்றம், கரூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் வழங்கிய பி படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்டிருந்தது. கையொப்பம் இடவில்லை. இந்த விவகாரம் அப்போதே பெரிய விவாதமானது. இந்த நிலையில், திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க வேட்பாளர் போஸ்க்கு எதிராகப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் சரவணன், போஸின் வெற்றிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில், ஜெயலலிதா கைரேகை உள்ளிட்ட 24 ஆவணங்களைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி உயர்நீதிமன்றத்தில் நேரில் சமர்ப்பிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில், போஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கைரேகை பதிவு செய்த விவகாரத்தில் விதி மீறல்கள் எதுவும் நடைபெறவில்லை. ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜேஷ் லக்கானி வரும் 24-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டனர். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!