வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (11/08/2017)

கடைசி தொடர்பு:18:20 (11/08/2017)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பள்ளி மாணவர்கள்! - அதிர்ச்சி உத்தரவு

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்ற உத்தரவு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

         

கடலூரில் வரும் 16-ம் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்விழாவுக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவ-மாணவிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பிக்க வேண்டும் என்று  மாவட்ட கல்வி அலுவலகம் பள்ளிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது. இதனால் 15 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

 "மாநில அளவில் கல்வித் தரத்தில் ஏற்கெனவே பின் தங்கியுள்ளது நம் மாவட்டம். இந்நிலையில், அரசு விழா என்ற போர்வையில் மாணவர்களை கட்சி விழாவுக்கு அழைப்பது சட்டத்துக்குப் புறம்பானது. பல்லாயிரக்கணக்கானோர் கூடும் இக்கூட்டத்தில் ஏதாவது, அசம்பாவிதம் என்றால் மாணவ - மாணவிகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்பது. இவ்விழாவுக்கும் மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்" என்று கேள்வி எழுப்புகின்றனர் ஆசிரியர்கள். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் முருகன், "விழா மாலை நடைபெறவிருக்கிறது. காலையில், மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பு குறித்து கவுன்சலிங் கொடுக்கத்தான் அவர்களை அழைத்துள்ளோம்" என்றார்.