வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (11/08/2017)

கடைசி தொடர்பு:18:40 (11/08/2017)

உப்பளங்களில் மழைநீர் : உப்பு உற்பத்தியாளர்கள் கவலை!

கடந்த சில நாள்களாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதேபோல் இந்தப் பருவம் முழுவதும் தொடர்ச்சியாக மழை பெய்தால் சம்பா நெல் சாகுபடியை வெற்றிகரமாக மேற்கொண்டு விடலாம் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால், இந்த மழை உப்பு உற்பத்தியாளர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. 

மழைநீர்
 

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உப்பளங்கள் அதிகளவில் உள்ளன. தமிழ்நாட்டில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக வேதாரண்யத்தில் அதிக அளவில் உப்பு உற்பத்தி நடைப்பெற்று வருகிறது. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் உப்பளங்களில் அதிக அளவில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் உப்புகள் கரைந்து, தரமிழந்து நஷ்டம் ஏற்படத் தொடங்கியுள்ளது.

இதனால் உப்பு உற்பத்தியாளர்கள் மன உளைச்சல் அடைந்துள்ளார்கள். இங்குள்ள உப்பளங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகியுள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்தால் உப்பு உற்பத்தி கடும் சரிவைச் சந்திக்கும். பற்றாக்குறை ஏற்பட்டு தமிழ்நாட்டில் உப்பு விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது. கடந்த சில மாதங்களாக மழை இல்லாமல் காலநிலை ஒத்துழைத்ததால் இப்பகுதிகளில் உப்பு உற்பத்தி அதிக அளவில் நடைப்பெற்றது. செப்டம்பர் மாதத்திலிருந்துதான் அதிகமாக மழை பெய்யும் என்ற கணிப்பில் இருந்திருக்கிறார்கள் உப்பு உற்பத்தியாளர்கள். இதனால் இதற்கான பணிகளை வழக்கம் போல் மேற்கொண்டிருக்கிறார்கள். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யாத உப்பளங்கள், தற்போதைய மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.