Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடோடிகளான நாங்கள் வீடுகளில் வசிக்கக்கூடாதா? ஊசிமணி பாசிமணி விற்பவர்களின் குமுறல்

முன்னறிவிப்பின்றித் திடீரென ஊசிபாசிமணி விற்கும் ஏழை மக்களின் வீடுகள் அகற்றப்பட்டதால், அதில் வசித்தவர்கள் மிகவும் பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  

குடியிருப்பு

காரைக்காலில் உள்ள ஓமக்குளம் பகுதி காலனியில், அரசுப் புறம்போக்கு இடத்தில் 20-க்கும் மேற்பட்ட ஊசிபாசிமணி விற்கும் ஏழை மக்கள் கடந்த 20 வருடங்களாக வசித்துவருகின்றனர். இதில், 11 குடும்பங்களுக்கு மட்டும் 1998-ல் பட்டா கொடுத்த புதுவை அரசு, மற்றவர்களுக்குப் பிறகு தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 5-ம் தேதி பொக்லைன் இயந்திரத்துடன் வந்த அதிகாரிகள், பட்டா இல்லாமல் வீடுகட்டி வசித்தவர்களை மிரட்டி, ''இது மார்க்கெட்டிங் சொசைட்டிக்குச் சொந்தமான இடம். ஆகவே, நாங்கள் வீடுகளை இடித்துத் தள்ளுவதற்குள் நீங்களே காலிசெய்துவிடுங்கள்'' என்றுகூற, படிப்பறிவு இல்லாத அந்த அப்பாவி மக்கள், தாங்களாகவே கண்ணீருடன் காலிசெய்திருக்கிறார்கள்.  

ரஜினி

இதுபற்றி வீடு இழந்த ரஜினியிடம் பேசியபோது, ''ஏற்கெனவே நாங்க காரைக்கால் பஸ் ஸ்டாண்ட் பின்புறம் குடியிருந்தோம். 'இதுல சந்தை வைக்கப்போறோம் காலிபண்ணுங்க'னு சொல்லி இப்ப இருக்குற இடத்துல இருக்கச் சொன்னாங்க. இது, அரசுப் புறம்போக்கு இடம்தான். அதுல, 11 பேருக்கு பட்டா கொடுத்தவங்க, எங்களுக்குக் கொடுக்கலை. பட்டா இல்லாம 13 குடும்பம் வசித்த இடத்த, ஆறு வருஷத்துக்கு முன்னால ஆளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து எம்.எல்.ஏ. ஆள்கள் எடுத்துக்கிட்டாங்க.  அதன்பிறகு, குடியிருந்த இடத்தைத்தான் இப்போ காலிபண்ணச் சொல்லிட்டாங்க.  காலத்துக்கும் வானமே கூரை, பூமியே படுக்கைனு இருந்த எங்க ஜனங்க, இப்ப நாலு பேரைப்போல வீடுகட்டி, புள்ளைங்கள படிக்கவெச்சி வாழுறது புடிக்கலை. எங்களுக்கு நல்லது செஞ்சி வாழவைக்க வேண்டிய அரசாங்கம், வீதியில விரட்டினா என்ன செய்யறது'' என்றார் வேதனையுடன்.  

சுமதி

சுமதி என்பவர், “பாசிமணி ஊசியெல்லாம் விற்று, அரைவயிறு கஞ்சி குடிச்சாலும் நாங்க எல்லோரும் ஒரே இடத்துல ஒற்றுமையா வாழ்ந்துவந்தோம். இப்போ, எங்களுக்கு 'வேற எங்கு புறம்போக்கு இடமிருக்கோ... அங்கே தர்றோம்'னு அதிகாரிங்க சொல்றாங்க. இங்க பக்கத்திலேயே பள்ளிக்கூடம் இருக்கறதால எங்க புள்ளைங்கள படிக்கவெச்சோம். இனி எங்க இடம்தருவாங்களோ தெரியலை. தாயாபுள்ளையா ஒண்ணா வாழ்ந்த நாங்க இனி வேறு இடத்துல பிரிஞ்சி வாழணும். புள்ளைங்க நாலுஎழுத்து படிக்கக்கூடாதா? எங்கமேல பரிவுகாட்டவேண்டிய அதிகாரிங்க அனாதையா விரட்டுறாங்களே... இது நியாயமா'' என்றார் ஆதங்கத்துடன்.

இவர்களின் நிலையை அறிந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் ஆனந்தகுமார், நகராட்சி மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பேசி... வீடு இழந்த 13 குடும்பத்தினரும் தற்போது தற்காலிகமாய் தங்கி வசிக்க, திருநள்ளாறு ரோட்டிலுள்ள சமுதாயக்கூடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார்.  

வீடுகள் அகற்றப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட காரைக்கால் தாசில்தார் பொய்யாதமூர்த்தியிடம் பேசியபோது, ''இதன் அருகில் அரசுப் புறம்போக்கு இடம் உள்ளதா என்று ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கேன் அல்லது, வேறு எங்கிருந்தாலும் அவர்களுக்கு உடனடியாக மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்துவருகிறேன். அதுவரையில், சமுதாயக்கூடத்தில் தங்கியிருக்கட்டும். அவர்களுக்குத் தேவையான உதவி செய்யப்படும்'' என்றார். 

ஊசிபாசிமணி விற்கும் கூட்டம் என்பதற்காக, அவர்கள் வீடுகளை அகற்றி... வீதிக்கு விரட்டுவதுதான் புதுவை அரசின் அழகா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement