Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புதிய வேலைக்கு மாறினாலும் மூன்றே நாளில் பி.எஃப் பணம்!

நம்மில் பலர், அடிக்கடி வேலை மாறுகிறார்கள். ஆனால், புதிய நிறுவனத்துக்குச் சென்றவுடன் பழைய பி.எஃப் குறித்துக் கவலைப்படுவதில்லை. சிலர் மறந்தேவிடுகிறார்கள். இதனால் பல கோடி ரூபாய், யாரும் கோரப்படாமலேயே இருக்கிறது. இந்த நிலையில், ஊழியர் ஒருவர் புதிதாக வேறு ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தாலும், ஊழியரின் வசதிக்காக அவருடைய பி.எஃப் பணம் தானாகவே மாற்றும் வசதி கொண்டுவரப்பட உள்ளது. 

பி.எஃப் பணம்

மாதச் சம்பளம் வாங்கும் பலருக்கும், நம்முடைய சம்பளம் எவ்வளவு என்பது சரியாகத் தெரியாது. ``சம்பளத்தில் பிடித்தம் போக இவ்வளவு கையில் கிடைக்கும்'' என்றுதான் சொல்வார்களே தவிர, மொத்தச் சம்பளம் எவ்வளவு, அதில் என்னென்ன பிடித்தம் செய்கிறார்கள், வருமானவரிக்காகப் பிடிக்கிறார்களா அல்லது வருங்கால வைப்புநிதிக்காகப் பிடிக்கிறார்களா என்பதுகூட பலருக்கும் தெரியாது. 

ஓரளவுக்கு பி.எஃப் பணம் பிடிக்கிறார்கள் எனத் தெரிந்தாலும், அதில் எவ்வளவு பிடிக்கிறார்கள், பி.எஃப் கணக்கில் இதுவரை எவ்வளவு தொகை இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பார்கள்/இருக்கிறார்கள். இதன் பலன் இன்று தெரியவில்லை என்றாலும், நிச்சயம் ஓய்வுக்காலங்களில் தேவைப்படும். இதுமட்டுமின்றி, குழந்தைகளின் திருமணம், கல்விச் செலவுகள், மருத்துவ சிகிச்சை, வீடு கட்டுதல் உள்பட அவசரத் தேவைக்கு  பி.எஃப் பணம் அவசியம் பயன்படும். 

யுனிவர்சல் கணக்கு எண்! 

பி.எஃப் கணக்கைப் பொறுத்தவரை, சில வருடங்களுக்கு முன் பி.எஃப் தொகையைத் தெரிந்துகொள்வது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால், இப்போது அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டன. முன்பு இருந்ததைவிட பி.எஃப் நடைமுறையை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு பி.எஃப் பயனாளருக்கும் `யு.ஏ.என்' எனச் சொல்லப்படும் யுனிவர்சல் கணக்கு எண் (Universal Account Number) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பி.எஃப் தொகையைக் கையாள்வது, பணத்தை எடுப்பது, வேறு நிறுவனத்துக்கு மாறினாலும் பி.எஃப் பணத்தை மாற்றுவது என அனைத்தும் எளிதாகிவிட்டன. 

புதிய நிறுவனத்துக்குச் செல்லும்போது யு.ஏ.என் எண்ணைக் கொடுக்கும்பட்சத்தில், ஏற்கெனவே இருக்கும் தொகையில் புதிய பி.எஃப் தொகையும் எளிதாகச் சேர்த்துக்கொள்ள முடியும். யு.ஏ.என்-யை அடிப்படையாக வைத்து பி.எஃப் வலைதளத்தில் நம்மிடம் எவ்வளவு தொகை இருக்கிறது, ஒவ்வொரு மாதமும் எவ்வளவு தொகை நம்முடைய கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது, பழைய நிறுவனத்தில் இருக்கும் தொகை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் தெரிந்துகொள்ள முடியும். 

ஆதாருடன் பி.எஃப்! 

இந்த நிலையில், ``பழைய நிறுவனத்திலிருந்து புதிய நிறுவனத்துக்கு மாறும் ஊழியர்கள், பி.எஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துப் பதிவுசெய்திருந்தால், அடுத்த மாதத்திலிருந்து தானாகவே பி.எஃப் பணம் மாறும் வசதி கொண்டுவர உள்ளது'' என மூத்த பி.எஃப் ஆணையர் வி.பி.ஜாய் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ``ஊழியர் ஒருவர் ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்கு மாறினால், எந்த ஒரு விண்ணப்பமும் இல்லாமல் மூன்று நாள்களில் அவருடைய பி.எஃப் கணக்கு மாற்ற முயற்சி செய்துவருகிறோம். இதற்கு ஆதார் அட்டை அவசியம். ஆதார் அட்டை, சரிபார்ப்புக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பணம் மூன்று நாள்களில் ஊழியர்களின் பி.எஃப் கணக்குக்கு மாற்றப்படும். இதற்காக ஏற்கெனவே இருக்கும் பி.எஃப் கணக்கை மூடவேண்டியதில்லை. ஒவ்வொரு முறை ஊழியர்கள் வேலையை மாற்றும்போதும், பல கணக்குகள் மூடப்படுகின்றன. பழைய பி.எஃப் கணக்கை முடித்த பிறகு, ஒருசில மாதங்களில் ஊழியர்கள் புதிய நிறுவனத்தில் சேர்ந்த பிறகு புதிய பி.எஃப் கணக்கைத் தொடங்குகின்றனர். இதனால், இப்போது ஆதார் எண்ணைக் கட்டாயம் ஆக்கியுள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, பி.எஃப் கணக்குகள் மூடப்படுவதை விரும்பவில்லை. ஊழியர்கள் தங்களுடைய சமூகப் பாதுகாப்புக்காக பி.எஃப் பணத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே விரும்புகிறோம். எதிர்காலத்தில் ஒருவர் ஆதார் எண்ணை வைத்திருந்தால், அது சரிபார்க்கப்பட்டு நாடு முழுவதும் ஊழியர் ஒருவர் எங்கு வேலைக்குச் சென்றாலும், எந்த ஒரு விண்ணப்பமும் இல்லாமல் பி.எஃப் கணக்கை மாற்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம். இது மிக விரைவில் நடைபெறும்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement