இரசாயன விநாயகர் வேண்டாமே.!

நாடுமுழுவதும் வரும் 25ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவிருக்கிறது. இந்நிலையில் நாட்டில் பல்வேறுப்பகுதிகளில் விநாயகர் சிலை தயாரிப்புப் பணி மும்முரமாக நடந்துவருகிறது. அவற்றில் பெரும்பாலானவை ரசாயன பூச்சு கொண்டதாக இருப்பதாகவும், அதை நீர்நிலைகளில் கரைக்கும் போது, நீர்நிலைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. இதனால் சிலை செய்வதில் சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. சிலைக்கு பெயின்ட் அடிப்பது கூட தடை செய்யப்பட்டுள்ளது. இருந்த போதும் ரசாயன விநாயகரே பெரும்பாலும் செய்யப்படுகிறது. மேலும், இந்த வருடம் பருவமழை பொய்த்துப்போனதாலும், தென்மேற்குப்பருவமழை காலம் தாழ்ந்து இப்போதுதான் ஆரம்பம் ஆவதாலும், விநாயகர் சிலைகள் கரைப்பதற்கான நீர்நிலைகளில் தற்போது தண்ணீர் இல்லை என்பதே உண்மை.

சில இடங்களில் இருக்கும் சிறிய அளவிலான தண்ணீரில் அதிக அளவில் ரசாயன விநாயகரைக் கரைப்பதால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னை உருவாகலாம். தமிழக அரசின் சார்பில் அனைத்து மாவட்டங்களுக்கும் விநாயகர் சிலை கரைப்பு சம்மந்தமான விதிமுறைகள் அனுப்பப்பட்டுள்ளன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சிலைகள் கரைப்பதற்கான இடமும், அதற்கான விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தேனி மாவட்டத்தில் வராக நதி, வைகை நதி, முல்லை பெரியாறு, கொட்டக்குடி ஆறு போன்ற ஆறுகளில் 8 இடங்களில் சிலைகள் கரைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி திருநாளில், ரசாயன சிலைகளைத் தவிர்த்து, வெறும் களிமண்ணால் ஆன சிலையை செய்து அதனை நீர்நிலைகளில் கரைப்பதே சுற்றுச்சூழலுக்கு நல்லது. அதனையே அந்த விநாயகப் பெருமானும் விரும்புவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!