Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காற்று வாங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள்: காரணம் இதுதான்!

பொறியியல் படிப்புக்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாகவே கண்டம் நிலவுகிறது. மொத்தம் உள்ள 1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில், 50 சதவிகித இடங்கள் நிரம்புவதே பெரிய விஷயமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி தொடங்கியது. முதலில் தொழிற் பிரிவுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதையடுத்து, கடந்த மாதம் 23-ம் தேதி பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது.

அண்ணா பல்கலைக்கழகம்


தொடர்ந்து 20 நாள்கள் நடைபெற்ற இந்தக் கலந்தாய்வு நேற்றுடன் முடிந்துள்ளது. 20 நாள்களில் மொத்தம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 552 பேர் கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டனர். அவற்றில் 86 ஆயிரத்து 355 பேருக்கு மட்டுமே ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மெக்கானிக்கல் படிப்பில் சேருவதற்கு 38 ஆயிரத்து 353 பேர் ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர்.  48 ஆயிரத்து 583 பேர் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. 


அதாவது கலந்தாய்வுக்காக அழைக்கப்பட்டவர்களில் 35.84 பேர் கலந்தாய்வில் கலந்து கொள்ளாமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 89 ஆயிரத்து 101 இடங்கள் காலியாக உள்ளன. கடந்தாண்டு 1 லட்சத்து ஆயிரத்து 318 இடங்கள் காலியாக இருந்தன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் இடங்கள் கூடுதலாக நிரம்பியுள்ளன என்று மகிழ்ச்சியடைய முடியாது.

பொறியியல் கலந்தாய்வு


பொறியியல் கலந்தாய்வில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக முதன்மை மற்றும் உறுப்பு கல்லூரிகளில் பெரும்பாலான இடங்கள் நிரம்பிவிட்டன. ஆனால், தனியார் கல்லூரிகளில் கிட்டதட்ட 50 சதவிகித இடங்கள் நிரம்பாமல் உள்ளன. என்னதான் தனியார் பொறியியல் கல்லூரிகள் டிசைன், டிசைனாக லோக்கல் சேனல் மற்றும் செய்தித் தாள்களில் விளம்பரம் கொடுத்தாலும், அங்கிருந்து வெளிவரும் வி.ஐ.பி-களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.


இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபுவிடம் பேசினோம், "கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பொறியியல் படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பின்றி வீட்டில்தான் இருக்கின்றனர். 500-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும்போது, உள்கட்டமைப்பு வசதிகளில் முக்கியமான ஒன்றாக கருத வேண்டியது ஆசிரியர்கள்.

பிரின்ஸ் கஜேந்திரபாபு


பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. மாணவர்கள் கைட் வைத்து படிக்கக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. டுட்டோரியலை விட மோசமான சூழல்தான் தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிலவுகிறது. தனியார் கல்லூரிகளை எம்ப்ளாய்மென்ட் ஆஃபிஸ் போலதான் பெற்றோர்கள் பார்க்கின்றனர். எந்தக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ அதிகமாக உள்ளது என்று பார்த்துதான் சேர்க்கின்றனர். அரசுக் கல்லூரிகளில் அதிக அளவு மாணவர்கள் சேர்வதற்கு அங்கு இருக்கும் தரமான ஆசிரியர்களும், தரமான கல்வியும்தான் காரணம்.

தனியார் கல்லூரிகள் கேம்பஸ் இன்டர்வியூவை வைத்துதான் இயங்குகின்றன. கல்வியை வைத்து இயங்குவதில்லை. மேலும், மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து பார்க்கின்றனர். உயர்கல்வியைப் பொறுத்தவரை மதிப்பெண்ணை அடிப்படையாக வைத்து பார்க்கக் கூடாது. இந்தக் காரணங்களால், மாணவர் சேர்க்கை குறைகிறது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும்.
பொறியியல் படிப்பை கனவாகக் கொண்டு அதில் சாதிக்க விரும்பும் மாணவர்கள் மட்டுமே, பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு வேலைக்காகவோ, டிகிரிக்காகவோ மட்டும் பொறியியல் படிக்கக் கூடாது. அடுத்தாண்டு முதல் பொறியியல் படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்பது, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு மட்டுமே உயர்கல்வி என்ற நிலையாக மாறும்" என்றார் உறுதியாக.

பொருளாதாரம் என்பது முக்கியம்தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால், மாணவர்களுக்குப் பிடித்தத்துறையைத் தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம்தான் அது சாத்தியமாகும் என்ற நிதர்சனத்தை நாம் உணர வேண்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement