அடுத்தடுத்து அதிரடி ரெய்டுகள்... டெல்லி பிக்பாஸ்களின் திருப்திக்காக நடத்தப்பட்டதா? | Tamil nadu raids, after that what happened

வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (12/08/2017)

கடைசி தொடர்பு:10:00 (12/08/2017)

அடுத்தடுத்து அதிரடி ரெய்டுகள்... டெல்லி பிக்பாஸ்களின் திருப்திக்காக நடத்தப்பட்டதா?

ரெய்டு

மிழகத்தில் அரசியல்வாதிகளை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ரெய்டு பீதி தெறிக்கவிட்டு ஓடவைக்கிறது. பரபரப்பை ஏற்படுத்திய ரெய்டுகள் குறித்து வரிசையாகப் பார்க்கலாம்.

வெளிச்சத்துக்கு வந்த அன்புநாதன்

வருமான வரித்துறையின் முதல் ரெய்டு, கடந்த ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி அரங்கேறியது. அப்போதைய ஜெயலலிதா அமைச்சரவையில்அன்புநாதன் இருந்த ஐவரணி அமைச்சர்களுக்கு இந்த அன்புநாதன் நெருக்கமானவராக இருந்தார். அ.தி.மு.க சார்பில் தேர்தலின் போது வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்வதற்காக அன்புநாதனிடம் பணம் கொடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. அன்புநாதனின் பெயர் அப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்தது.  ரெய்டு நேரத்தில் அன்புநாதன் எஸ்கேப் ஆகிவிட்டார்.   சோதனையில், அன்புநாதனின் வீட்டில் ரூ.4.77 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்புலன்சில் அரசு சின்னம், பெயரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக அன்புநாதன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இப்போது அன்புநாதன் ஜாமீனில் இருக்கிறார்.

 சோதனைக்கு உள்ளான நத்தம்

நத்தம் விஸ்வநாதன் அடுத்ததாக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வீடு மற்றும் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வீடு உட்பட 40 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி, வருமான வரித்துறையினர் சோதனை செய்தனர். அன்புநாதன் வீட்டில் ரெய்டு நடைபெற்று  நான்குமாதங்கள் கழித்து இந்த ரெய்டு நடந்தது. இந்த ரெய்டைத் தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் கைது செய்யப்படப் போகிறார் என்று செப்டம்பர் 21-ம் தேதி பரபரப்பு நிலவியது. அதன் பின்னர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரெய்டு விவகாரம் அப்படியே அமுங்கிப்போனது.  

மணல் குவாரி சேகர் ரெட்டி

ஓ.பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமானவரும், மணல்குவாரிகளைக் கையில் வைத்திருக்கும் சேகர் ரெட்டியின் அலுவலகம், வீடுகளில் கடந்த டிசம்பர் 8-ம் தேதி வருமானவரித்துறையினர்  தங்களது அடுத்த சோதனையை நடத்தினர்.  அவரது வீட்டில் இருந்து பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டதாகக் கூறினர். அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வரலாற்றில் முதன்முறை

ராம மோகனராவ்தமிழக அரசியல்வரலாற்றில் முதன் முறையாக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ், வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி சோதனை நடந்தது. சேகர் ரெட்டியின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் ராம மோகனராவுக்கு எதிராக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது என்றும், அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த ரெய்டு நடந்தது என்றும் கூறினர். இதனால் தலைமைச் செயலாளர் பதவியை ராம மோகனராவ் இழந்தார். சிலமாதங்கள் கழித்து தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், ரெய்டுக்கான காரணங்கள் இன்றுவரை புரியாத மர்மமாக இருக்கிறது. சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரின் வீடுகளில் டிசம்பர் 24-ம் தேதி வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. அதில் மணல் குவாரிகள் தொடர்பாக ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகச் சொன்னார்கள். கைது செய்யப்பட்ட இவர்களும் இப்போது ஜாமீனில் இருக்கிறார்கள்.

 

அமைச்சரை தெறிக்கவிட்ட ரெய்டு

சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி, வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விஜயபாஸ்கர் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவரது வீட்டில் ரெய்டு நடந்தது. அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 89 கோடி ரூபாய் பட்டுவாடா நடைபெற்றது என்று வருமான வரித்துறையின் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டியது. இந்த ஆவணத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதன் அடிப்படையில் போலீஸில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகார் தொடர்பாக ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட பிறகும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை.  விஜயபாஸ்கரின் பினாமி பெயரில் இருந்த 100 ஏக்கர் விவசாயநிலத்தை வருமானவரித் துறை முடக்கி வைத்துள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்தபோது,  சிட்லபாக்கம் ராஜேந்திரன், நடிகரும், சமக கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டிலும் ரெய்டு நடைபெற்றது. சரத்குமார் மனைவி ராதிகாவின் ராடன் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

சி.பி.ஐ-யின் அதிரடி

ப.சிதம்பரம், கார்த்தி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகள், அலுவலகங்களில் கடந்த மே 16-ம் தேதி சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சகத்தில் இருந்து ஆதாயம் பெற்றதற்கு கைமாறாக 2008-ம் ஆண்டு ஐநாக்ஸ் மீடியா நிறுவனம் கார்த்தி சிதம்பரத்துக்கு பங்குகள் கொடுத்ததாகவும், பணம் கொடுத்ததாகவும் எழுந்த புகாரின் பேரில் இந்த ரெய்டு நடந்ததாகக் கூறப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிப் போய்விடுவார் என்று விமான நிலையங்களில்  look out நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்குத் தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதியே வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இப்படி தமிழகத்தில் சோதனை மேல் சோதனை நடத்தி வருமானவரித்துறை, அமலாக்கப்பிரிவு, சி.பி.ஐ ஆகிய மத்திய அமைப்புகள் பரபரப்பை மட்டுமே கிளப்பின. அமைச்சர் விஜயபாஸ்கரின் பினாமி சொத்துகள் முடக்கப்பட்டது தவிர மற்றவர்கள்  மேல் ஏன் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது டெல்லியின் பிக்பாஸ்களுக்கே வெளிச்சம். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்