வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (12/08/2017)

கடைசி தொடர்பு:14:08 (12/08/2017)

அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க டெல்லியில் கட்டப் பஞ்சாயத்து! திருநாவுக்கரசர் காட்டம்

தமிழக மக்களின் நலனுக்காக பிரதமரைச் சந்திக்காமல், அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்க டெல்லியில் பா.ஜ.க.வினர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வருவதாக தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் காட்டமாகக் கூறினார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.மு.க எம்.பி.க்கள் பங்கேற்றனர். இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். அப்போது, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல்வரும், ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் தமிழகம் திரும்பவில்லை.

இதனிடையே, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், "மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின் தற்போது வரை அரசின் செயல்பாடே இல்லை. அ.தி.மு.க பல அணிகளாக பிரிந்து நிற்கிறது. ஒவ்வொரு அணி தலைவர்களும் அவரவர் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளனர். ஜெயலலிதா  இறப்புக்குப் பின் அ.தி.மு.க.வை பிரித்ததும் பா.ஜ.க..தான். தற்போது அணிகளை இணைப்பதில் குறியாக இருப்பதும் பா.ஜ.க.தான். அ.தி.மு.க.வை பா.ஜ.க முடக்கி வைத்துள்ளது. அ.தி.மு.க அணிகளுடனான பிரச்னைகளை தீர்த்து வைத்து கட்டப்பஞ்சாயத்து செய்து வைப்பதிலேயே பிரதமர் மோடிக்கு நேரம் சரியாக இருக்கிறது. மோடியின் கட்டளையின்படியே அ.தி.மு.க அணிகளின் நிர்வாகிகளும் செயல்பட்டு வருகிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை இதுவரை தனித்தனியாக 10 தடவைக்கு மேலே சந்தித்திருக்கிறார் மோடி. ஆனால். டெல்லியில் பல நாள்களாக போராடி வரும் விவசாயிகளை சந்திக்காமலும், தன் சார்பாக பிரதிநிதிகளைக் கூட அனுப்பாமலும் புறக்கணித்து வருகிறார்.  அ.தி.மு.க.வை பா.ஜ.க.தான் முடக்கி வைத்துள்ளது.  தமிழகத்தில் மட்டும் இதுவரை ஒரு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில் சிறப்பு திட்டம் ஏதுமில்லை. பன்னிரண்டாம் வகுப்பு அரசுத் தேர்வில்  நல்ல மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளும் நீட் தேர்வால் பாதிக்கப்பட்டு மருத்துவர் கனவை மறக்கும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு தயங்குவது ஏன். தமிழகம் சுமார் 5,000 பேருக்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதற்கு காரணம் சுகாதாரத்துறையின் செயல்பாடு இல்லாமைதான்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க