டெங்கு காய்ச்சலுக்கு தரமான சிகிச்சைகள்..! விஜயபாஸ்கர் விளக்கம்

“உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள தரமான சிகிச்சை அரசு மருத்துவமனையில் கிடைப்பதால், டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள், தற்போது அங்கிருந்து அரசுமருத்துவமனைகளுக்கு வரத்தொடங்கிவிட்டார்கள்” என செய்தியாளர்கள் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அரசு மருத்துவமனைகளில் மட்டும் சுமார் 4500-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பதினைந்தாயிரத்திற்கு மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு தினறி வருகிறது.

இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள ஐ.சி.எச் மருத்துவமனையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், “ஏற்கெனவே பழனி, திண்டுக்கல், கோயமுத்தூர், திருப்பூர், ஈரோடு என தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இன்று காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து சென்னை எழும்பூரில் உள்ள ஐ.சி.எச் மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 90 பேரில், நான்கு பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்ற மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சலை பொதுமக்கள் அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக அருகில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அப்போதுதான் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள அந்த தரமான சிகிச்சையை பெறமுடியும். அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் தரமான சிகிச்சையை கண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள்  அரசு மருத்துவமனைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள். 10 லிருந்து 15 நாட்களுக்குள் டெங்குவை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.” என்றார் 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!