மதுரையில் சுறுசுறுப்பான அமைச்சர் உதயகுமார்..!

டி.டி.வி.தினகரன் மதுரையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில் அமைச்சர் உதயகுமார், அங்கு நடைபெறும் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுவருகிறார். 

வருகிற 14-ம் தேதி டி.டி.வி.தினகரன் மதுரை மேலூரில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கான வேலைகள் பிரம்மாண்டமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தன்னுடைய இருப்பைக் காட்டிக்கொள்ள அமைச்சர் உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இடைவெளி இல்லாமல் தொடர் நிகழ்ச்சிகளில் உலா வந்து கொண்டிருக்கிறார். அவருடன் எம்.எல்.ஏக்கள் ராஜன்செல்லப்பா, நீதிபதி பெரியபுள்ளான், ஆகியோரையும் அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறார். நேற்று நடந்த நிகழ்ச்சிகளில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் உடன் சென்றார். பலரும் அதைப்பற்றி அவரிடம் கேட்கவே, இன்று செல்லாமல் தவிர்த்துவிட்டார்.

இந்த நிகழ்ச்சிகளை கவர் செய்வதற்காக பி.ஆர்.ஓ. அலுவலகத்திலிருந்து வாகனம் மூலம் செய்தியாளர்கள் தினமும்  அழைத்துச் செல்லப்படுகிறார்கள். சிறப்பு அம்மா திட்டத்தினை நேற்று கள்ளிக்குடி ஒன்றியத்தில் தொடங்கி வைத்தவர், டி.கல்லுப்பட்டி, பேரையூர் பகுதிகளில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இன்று திருமங்கலத்தில் ஹோமியோபதி கல்லூரியில் புதிய கட்டிட திறப்பிலும், வேளாண்மைத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். தினகரன் மேலூர் வந்து செல்லும் வரை அமைச்சர் உதயகுமாருக்கு ஓய்வில்லை, தினமும் நிகழ்ச்சிதான் என்கிறார்கள் கட்சியினர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!