வெளியிடப்பட்ட நேரம்: 21:14 (12/08/2017)

கடைசி தொடர்பு:21:14 (12/08/2017)

கிராம சபைக் கூட்டத்தில் இதைத் தான் விவாதிக்கப் போகிறார்கள்!

நெல்லை மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், எதையெல்லாம் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாத நிலையில், ஊராட்சிமன்ற தனி அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடைபெறவுள்ளது. நெல்லை மாவட்டத்தில் 425 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. அவை அனைத்திலும் கூட்டங்களை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுவுள்ளது. அத்துடன் எந்தெந்த விவகாரங்கள் குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார். 

அதன்படி, குடிநீரை சிக்கனமாக உபயோகித்தல், கொசுக்கள் மூலமாகப் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்ட அறிக்கையினை கிராம சபைக் கூட்டத்தின் முன்வைத்து ஒப்புதல் பெறுதல், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மை குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஒப்புதல் பெறுதல் ஆகியவை நடைபெற உள்ளது. 

அத்துடன்,  ஊராட்சிப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்தும் அதன் செல்வீனங்கள் குறித்தும் விவாதித்தல், மகளிர் திட்ட செயல்பாடுகள் பற்றி கலந்து பேசுதல், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் புதுவாழ்வு செயல்பாடுகள் குறித்த அறிக்கை தாக்கல் செய்தல், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக 18 முதல் 35 வயது வரையிலான கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது குறித்து ஆலோசித்தல் ஆகியவை நடைபெற உள்ளது.

மேலும், அரசு மூலமாக தனிநபர் கழிப்பறைத் திட்டம் குறித்து அனைத்து மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் கட்ட ஏற்பாடு செய்தல், ஊராட்சி மன்ற தனி அலுவலரால் கொண்டுவரப்படும் இதரப் பொருள்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதனால், பொதுமக்களும் மகளிர் சுய உதவிக் குழுவினரும் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று இந்த விவாதத்தில் பங்கேற்று தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக் கொண்டுள்ளார்.